
ஜியார்ஜியா, ஜூன் 16-அமெரிக்காவின் ஜியார்ஜியா, அட்லாண்டா ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற ஃபிபா உலகக்கோப்பை ஹெச் பிரிவு ஆட்டத்தில் நட்சத்திர வீரர்கள் கொண்ட ஐரோப்பிய சாம்பியன் ஸ்பெயின் அணியை 50 லட்சம் மக்கள் தொகையே கொண்ட உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு தகுதி பெற்ற 3-வது சிறிய ஆப்பிரிக்க நாடான கேப் வெர்டே கால்பந்து அணி 0-0 என்று டிராவுக்குப் பணித்தது. இதன் மூலம் அறிமுக உலகக் கோப்பை போட்டியிலேயே புள்ளிகள் பெற்று சாதனை படைத்தது கேப் வெர்டே. இதற்கு பிரதான காரணம் கேப் வெர்டே அணியின் 40 வயது கோல்கீப்பர் வோசின்ஹா தான் என்றால் மிகையாகாது. அவர்தான் நேற்று ஹீரோ. ஸ்பெயின் அணியின் 27 கோல் முயற்சியில் இலக்கை நோக்கிய ஷாட்கள் ஒன்று கூட கோலுக்குள் செல்ல முடியாமல் மதில் சுவாராய் நின்று காத்தார் வோசின்ஹா. ஆட்டத்தின் இறுதி விசில் அடிக்கப்பட்டவுடன் சாம்பியன் ஸ்பெயின் அணியுடன் 0-0 என்று டிரா என்ற ஸ்கோரைப் பார்த்து வோசின்ஹா உணர்ச்சி வயப்பட்டு கண்ணீர் விட்டார். ஸ்பெயின் அணிக்கு மேலும் அவமானமாகி இருக்க வேண்டிய விஷயமும் நடந்தது. அதாவது போட்டியைத் தோற்றிருக்கும். ஆட்டம் முடிவுத் தருணத்தை நெருங்கிக் கொண்டிருக்கையில் கேப் வெர்டே வீரர் டைனி போர்கேஸ் அடித்த கோல் நோக்கிய ஷாட்டை ஸ்பெயின் கோல் கீப்பர் உனய் சிமோன் தடுத்தார். இல்லையெனில் ஸ்பெயின் தோற்றே போயிருக்கும். உலகக் கோப்பையின் ஆகப்பெரிய ஷாக் ஆக அது மாறியிருக்கும். வெள்ளை நிற ஜெர்சியில் களமிறங்கிய கேப் வெர்டே வீரர்கள், தங்கள் கோல் பகுதியைச் சுற்றி உறுதியான பாதுகாப்பு அரணை அமைத்து ஸ்பெயினின் தொடர்ச்சியான தாக்குதல்களை முறியடித்தனர். போட்டி முடிவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வோசின்ஹா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.





















