
மும்பை, ஜூன் 17- மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த 24 வயதான பெண் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அவரது கணவர் விமானப்படை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஹஸ்ரத் மவுலானா என்பவர் முன்னிலையில், அந்தப் பெண்ணின் விருப்பத்துக்கு மாறாக வலுக்கட்டாயமாக மதமாற்றச் சடங்குகளைச் செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. அந்தப் பெண்ணின் கைகளை பிடித்துக் கொண்டு முஸ்லிம் மதச்சடங்குகளைச் செய்யும் வீடியோவும் வெளியாகியுள்ளது. அதில் அந்தப் பெண் என்னை விட்டுவிடுங்கள் என்று கதறுவதும் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் நடந்ததை தாமதமாக அறிந்து பெண்ணின் கணவர் கடந்த 14ம் தேதி புகார் அளித்ததை அடுத்து இந்த சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. போலீஸார் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த 2025-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நிலம் வாங்க விருப்பம் தெரிவித்து சம்பந்தப்பட்ட பெண்ணின் பள்ளி நண்பர் அய்யாஸ் தாஜ் மதாரே, என்பவர் தொடர்பு கொண்டு நேரில் சந்திக்க அழைத்துள்ளார். பிப்ரவரி 8-ம் தேதி ஒரு ஓட்டலில் நடந்த சந்திப்பின்போது, அய்யாஸ் அந்தப் பெண்ணுக்குக் கொடுத்த குளிர்பானத்தில் போதை மருந்து கலந்துள்ளார். போதை மருந்தால் பெண் மயங்கியதும் அவரை பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோவாக பதிவு செய்துள்ளார். மேலும், அந்த காட்சிகளை சமூக வலை தளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி கடந்த சில மாதங்களில் அந்தப் பெண்ணிடம் இருந்து சுமார் ரூ.4 லட்சம் வரை பறித்துள்ளார். இதில் தனது நண்பர்களையும் அய்யாஸ் கூட்டாளிகளாக சேர்த்துக் கொண்டார். அந்தப் பெண்ணுக்கு பில்லி, சூனியம் செய்துவிடுவோம் என்றும் அவர்கள் மிரட்டியுள்ளனர். இந்நிலையில் கடந்த மே மாதம் 31ம் தேதி அய்யாஸ், அவரது கூட்டாளி அமீன் ஷேக் ஆகிய இருவரும் சேர்ந்து அந்தப் பெண்ணைக் கல்மேஷ்வர் என்ற பகுதிக்கு கடத்திச் சென்றுள்ளனர்.


















