Home மாவட்டங்கள் பெங்களூர் ரீல்ஸ் மோகத்தால் சாப்பாடு போடாத மனைவியை கொன்ற கணவன்

ரீல்ஸ் மோகத்தால் சாப்பாடு போடாத மனைவியை கொன்ற கணவன்

பெங்களூர், ஆகஸ்ட் 7- குடும்பத் தகராறு காரணமாக மனைவியைக் கொலை செய்துவிட்டு, சடலத்தைப் போர்வையில் சுற்றிப் போட்டுவிட்டுத் தப்பியோடிய கணவரை கும்பளகூடு காவல்துறையினர் பீகாரில் வளைத்துப் பிடித்துள்ளனர்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தீரஜ் குமார் (24) என்பவரே கைது செய்யப்பட்ட குற்றவாளி ஆவார். இவர் கடந்த ஜூலை 27-ஆம் தேதி பெங்களூர் கெருபாளையாவில் உள்ள தனது வீட்டில் மனைவி ரியா குமாரை (20) கொலை செய்துவிட்டுத் தப்பியோடினார்.
கடந்த ஜூலை 29-ஆம் தேதி ரியாவின் தோழி அவருக்குப் பலமுறை போன் செய்தும் அவர் எடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த தோழி, வீட்டிற்கு நேரில் சென்று பார்த்தபோது ஜன்னல் வழியே கடும் துர்நாற்றம் வீசியுள்ளது. உடனடியாக வீட்டு உரிமையாளருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, கதவைத் திறந்து பார்த்தபோது, போர்வையில் சுற்றப்பட்ட நிலையில் ரியாவின் சடலம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
காதலித்துத் திருமணம் செய்துகொண்ட இந்தத் தம்பதி, பிழைப்பிற்காக 10 மாதங்களுக்கு முன்பு பெங்களூரு வந்து வாடகைக்குக் குடியிருந்துள்ளனர். ஆனால், பெங்களூரு வந்த சில மாதங்களிலேயே கணவர் மீது விருப்பமில்லாமல் போன ரியா, எப்போதும் மொபைலில் ‘ரீல்ஸ்’ செய்வதிலேயே நேரத்தைக் கழித்துள்ளார். கணவனுக்குச் சமைக்காமல், தனக்கு வேண்டியதை மட்டும் சமைத்துச் சாப்பிட்டுவிட்டுத் தூங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

சம்பவத்தன்று வேலை முடிந்து வந்த தீரஜிற்குச் சாப்பாடு வைக்காததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த ரியா, தடியால் தீரஜை அடித்துள்ளார். இதனால் கோபத்தின் உச்சிக்கே சென்ற தீரஜ், ரியாவின் துப்பட்டாவால் (வேல்) அவரது கழுத்தை இறுக்கிக் கொலை செய்துள்ளார். பின்னர் முகத்தில் பிளாஸ்டிக் கவர் சுற்றி, சடலத்தை வீட்டிலேயே போட்டுவிட்டு பீகாருக்குத் தப்பியோடியுள்ளார்.

தற்போது பீகாரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள தீரஜ், பெங்களூரு கொண்டு வரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.