
பெங்களூர், ஆகஸ்ட் 7
வாக்காளர் பட்டியலின் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தின் கீழ், பூர்த்தி செய்யப்பட்ட கணக்கெடுப்பு படிவங்களை சமர்ப்பிக்க ஆகஸ்ட் 8-ஆம் தேதி (நாளை) வரை மட்டுமே அவகாசம் உள்ளது. எனவே, விடுபட்ட படிவங்களை உடனடியாக சமர்ப்பிக்குமாறு கிரேட்டர் பெங்களூரு அதிகார அமைப்பின் தலைமை ஆணையர் மகேஸ்வர் ராவ் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜி.பி.ஏ. தலைமை அலுவலகத்தில் இன்று அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
கடந்த ஜூன் 30-ஆம் தேதி முதல் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு படிவங்களை விநியோகித்து வருகின்றனர். பொதுமக்கள் பூர்த்தி செய்த படிவங்களை விரைவாக ஒப்படைக்க வேண்டும்.
சிறப்பு திருத்தப் பணியின் போது; முகவரியில் இல்லாதவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், இறந்தவர்கள் மற்றும் போலி வாக்காளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த விவரங்கள் பொதுமக்கள் பார்வைக்காக ஜி.பி.ஏ. அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் முகவர்களுக்கும் இந்தத் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதில் ஏதேனும் ஆட்சேபனைகளோ அல்லது புகார்களோ இருந்தால், சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலரைத் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம். பெறப்படும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை
வரும் ஆகஸ்ட் 17-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அதில் பெயர் விடுபட்ட தகுதியான வாக்காளர்கள், உரிமைகோரல் மற்றும் ஆட்சேபனை செயல்முறையின் கீழ் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.
கூட்டத்தில் கலந்துகொண்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள், படிவங்களைச் சேகரிக்க கூடுதல் அவகாசம் வழக்கம்மாறு கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மகேஸ்வர் ராவ் உறுதி அளித்தார்.
இந்தக் கூட்டத்தில் சிறப்பு ஆணையர் சுஷமா கோட்போலே, மாநகராட்சி ஆணையர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.














