Home தலைப்பு செய்தி விஜய் உதயநிதி மோதல்

விஜய் உதயநிதி மோதல்

சென்னை, ஆக. 7-
தமிழ்நாடு சட்டசபையில் காவேரி நீர் பங்கீடு மற்றும் கர்நாடகாவின் மேகதாட்டு அணை திட்டம் தொடர்பாக ஆளும்கட்சிக்கும் எதிர்கட்சிக்கும் இடையே கடும் காரசார விவாதம் நடைபெற்றது.எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதல்வர் விஜய் இடையே சட்டசபையில் வாக்குவாதம் ஏற்பட்டது. “தமிழ்நாட்டின் உரிமைகளை காக்க எந்த அவமானத்தையும் சந்திக்க தயார்” என்று முதல்வர் விஜய் ஆவேசமாக பதிலளித்தார்.இன்று சட்டசபை கூடியதும், மேகதாட்டு திட்டத்தை தடுக்க தமிழ்நாடு அரசு தவறிவிட்டதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டினார். “கர்நாடக அரசு மேகதாட்டு அணையை கட்ட தீவிரமாக முயன்று வரும் நிலையில், அதை தடுக்க த.வெ.க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை விளக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்த முதல்வர் விஜய், “மேகதாட்டு திட்டத்திற்கு எதிராக ஏற்கனவே சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. பிரதமர் நரேந்திர மோடிக்கும் கடிதம் எழுதி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு விவசாயிகளின் நலனை காப்பதில் எங்கள் அரசு உறுதியாக உள்ளது” என்றார்.மேலும், “1969-ல் அப்போதைய திமுக அரசுதான் கர்நாடகாவின் திட்டங்களுக்கு முதன்முதலில் வழிவகுத்துக் கொடுத்தது” என்றும் அவர் திருப்பி அடித்தார். தொடர்ந்து பேசிய உதயநிதி, “கர்நாடகாவில் மேகதாட்டு விவகாரத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாடு அரசு அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட தயங்குவது ஏன்? முதல்வர் விஜய் பேச்சுவார்த்தைக்காக பெங்களூர் செல்ல திட்டமிட்டதாக செய்திகள் கசிந்தன, பின் எதிர்ப்பு வந்ததும் அதை மறுக்கிறார்கள்” என விமர்சித்தார்.இதற்கு பதிலளித்த முதல்வர் விஜய், “அண்டை மாநிலத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவது தவறா? எதிரி நாடுகளே பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாணும்போது, அண்டை மாநிலத்துடன் ஏன் பேசக்கூடாது? இதனால் அவமானம் ஏற்படும் என சிலர் கூறுகிறார்கள். தமிழ்நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காகஅத்தகைய அவமானத்தையும் சந்திக்க நான் தயார்” என்று காரசாரமாக தெரிவித்தார். தற்போதைய சூழலில் பதற்றம் நிலவுவதால் பெங்களூர் பயணத்தை ஒத்திவைக்குமாறு கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், தமிழ்நாடு முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். சூழல் சீரானதும் காவேரி நீர் பிடிப்பு பகுதிகளுக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.