Home மாவட்டங்கள் பெங்களூர் யானை முகாம்களுக்குப் புதிய கட்டுப்பாடுகள்: கர்நாடக வனத்துறை அதிரடி

யானை முகாம்களுக்குப் புதிய கட்டுப்பாடுகள்: கர்நாடக வனத்துறை அதிரடி

பெங்களூரு: ஜூன் 17-
கர்நாடக மாநில வரலாற்றிலேயே முதன்முறையாக யானை முகாம்களுக்குப் புதிய பாதுகாப்பு விதிமுறைகளை வனத்துறை அதிரடியாக அமல்படுத்தியுள்ளது
கடந்த மே 19-ஆம் தேதி துபாரி யானை முகாமில் தமிழகத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் யானை தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொடூர சம்பவத்தைத் தொடர்ந்தே இந்த அதிரடி நடவடிக்கை பாய்ந்துள்ளது.
புதிய விதிகளின்படி, சுற்றுலாப் பயணிகள் யானைகளை நெருங்க முடியாது; குறைந்தபட்சம் 30 அடி தூர இடைவெளி விட்டுத்தான் வேடிக்கை பார்க்க வேண்டும். யானைகளைக் குளிப்பாட்டவோ, தொடவோ, உணவளிக்கவோ முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் இதற்கென ஒதுக்கப்பட்ட ‘கிரீன் ஜோன்’ பகுதியில் மட்டுமே நின்று பார்க்க வேண்டும். முகாம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் தீவிரமாகக் கண்காணிக்கப்படும். மேலும், ஒரு முகாமில் 10 யானைகளுக்கு மேல் காட்சிப்படுத்தக் கூடாது என்றும், ஒரு நேரத்தில் 50 முதல் 75 பேருக்கு மட்டுமே 20 முதல் 30 நிமிடங்கள் வரை அனுமதி வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
“இந்த விதிகளைப் பின்பற்ற முகாம்களுக்கு 15 நாட்கள் கெடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்பின் அதிகாரிகள் ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கிய பிறகே முகாம்கள் இயங்க அனுமதிக்கப்படும்; அதுவரை அவற்றுக்குத் தடை விதிக்கப்படும்” என்று வனத்துறை முதன்மை தலைமைப் பாதுகாவலர் குமார் புஷ்கர் எச்சரித்துள்ளார்.