
சென்னை: ஜூன் 17-
தங்கம் விலை (Gold Price Today) தொடர்ந்து 2வது நாளாக இன்றும் குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.240 குறைந்து ரூ.1,12,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று ஒரு கிராம் தங்கம் ரூ.30 குறைந்து ரூ.14,030-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.275-க்கு விற்பனை செய்யப்படுகிறது. திடீரென உயர்ந்து வந்த தங்கம் விலை கடந்த இரு நாட்களாக குறைந்து வருவது நகை பிரியர்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்துள்ளது. தங்கம் விலை கடந்த ஆண்டு ஜனவரியில் இருந்து உச்சம் தொட ஆரம்பித்தது. நடப்பு ஆண்டு தொடங்கிய பிறகும் தங்கம் விலை நிற்கவில்லை. தொடர்ந்து உச்சம் தொட்டு வந்தது. தினம் தினம் புது உச்சம் தொட்டு வந்த தங்கம் விலை பிப்ரவரி மாதத்தில் இருந்து சற்று குறைய ஆரம்பித்தது. தொடர்ந்து அமெரிக்கா ஈரான் போருக்கு பிறகு மேலும் குறையத் தொடங்கியது.
மீண்டும் சரிந்த தங்கம் விலை கடந்த மே மாதம் 4 ஆம் தேதி சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.1,12,000 என்ற அளவிற்கு குறைந்தது. அதன் பிறகு மீண்டும் தங்கம் விலை ஏறியது. இருந்தாலும் பெரிய அளவில் உயராமல், புது உச்சம் தொடாமல் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. கடந்த வாரத் தொடக்கத்தில் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வந்தது. 8 நாட்களில் சவரனுக்கு ரூ.8 ஆயிரம் வரை சரிந்தது. இதனால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் மீண்டும் தங்கம் விலை உயரத் தொடங்கியது. இந்த நிலையில் நேற்று தங்கம் விலை சற்று குறைந்து இன்ப அதிர்ச்சி கொடுத்தது. நேற்று மட்டும் சென்னையில் சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.1,12,480-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.10 குறைந்து ரூ.14,060-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்றும் தொடர்ந்து 2வது நாளாக தங்கம் விலை குறைந்துள்ளது.


















