Home மாவட்டங்கள் பெங்களூர் உயிரோடு இருக்கும்போதே ‘மரண’ வதந்தி:சைபர் கிரைம் போலீசில் நடிகர் புகார்

உயிரோடு இருக்கும்போதே ‘மரண’ வதந்தி:சைபர் கிரைம் போலீசில் நடிகர் புகார்

பெங்களூரு: ஜூன் 17-
உயிரோடு நலமாக இருக்கும்போதே, ‘இறந்துவிட்டார்’ என சமூக வலைதளங்களில் பொய் செய்தி பரப்பிய வக்கிர புத்தி கொண்ட மர்ம நபர்கள் மீது, கன்னட திரையுலகின் மூத்த நடிகர் தொட்டண்ணா பெங்களூரு வடபகுதி சைபர் கிரைம் போலீசில் அதிரடியாகப் புகார் அளித்துள்ளார்.
லைக்குகளுக்கும், வியூஸ்களுக்கும் ஆசைப்பட்டு சோசியல் மீடியாவில் இத்தகைய கீழ்த்தரமான வேலையில் ஈடுபட்ட நெட்டிசன்களுக்கு, இந்த போலீஸ் புகார் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் சமூக வலைதளத்தில் உள்ள ‘பப்ளிக் பிரெண்ட்’) என்ற பக்கத்தில், நடிகர் தொட்டண்ணா மறைந்துவிட்டார் என்றும், அவருக்குக் கண்ணீர் அஞ்சலி செலுத்துவதாகவும் ஒரு போலி பதிவு பகிரப்பட்டது. இந்த செய்தி காட்டுத்தீயாய் பரவியதால், அதிர்ச்சியடைந்த அவரது ரசிகர்களும், திரை உலகினரும் பதற்றமடைந்தனர்.
இதையடுத்து, நடிகர் தொட்டண்ணாவே நேரடியாக ஊடகங்கள் முன் தோன்றி, “நான் நல்ல உடல்நலத்தோடு, ஆரோக்கியமாக இருக்கிறேன். தயவுசெய்து யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம்” என விளக்கம் அளிக்க வேண்டியதாயிற்று.
தொட்டண்ணாவுக்கு இப்படி மரண வதந்தி பரப்புவது இது முதல் முறையல்ல. கடந்த சில வருடங்களாகவே அடிக்கடி இத்தகைய வக்கிர செய்திகள் சமூக வலைதளங்களில் உலா வந்துகொண்டுதான் இருக்கின்றன.
ஒவ்வொரு முறையும் அமைதியாகப் போன தொட்டண்ணா, இந்த முறை இவர்களுக்குச் சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று முடிவெடுத்து, சைபர் கிரைம் போலீஸ் நிலையப் படிக்கட்டுகளில் ஏறியுள்ளார்.
நான் உயிரோடு இருக்கும்போதே இறந்துவிட்டதாகப் பதிவிட்டுள்ளனர். ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எடிட் செய்து, இந்த செய்தியை வைரலாக்கியது எனக்கு கடுமையான மன உளைச்சலையும், பேரதிர்ச்சியையும் தந்துள்ளது. இதனால் எனது குடும்பத்தினரும், ரசிகர்களும் வேதனை அடைந்துள்ளனர். எனவே, இந்த பொய் செய்தியைப் பரப்பியவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தொட்டண்ணா தனது புகாரில் கொந்தளித்துள்ளார்.
கடந்த ஜூன் 15-ஆம் தேதி தொட்டண்ணா அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளார். புகாரை மிகத் தீவிரமாக எடுத்துக்கொண்ட சைபர் கிரைம் போலீஸார், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். வதந்தி பரப்பிய அந்த ‘பப்ளிக் பிரெண்ட்’ கணக்கின் ஐபி முகவரியை வைத்து, அதன் பின்னணியில் இருக்கும் மர்ம நபர்களைப் பிடிக்கப் போலீஸார் தீவிர வேட்டையில் இறங்கியுள்ளனர்.