
புதுடெல்லி: ஜூன் 18-
ஜூன் 21-ம் தேதி நீட் மறுதேர்வை எந்தப் புகாரும் இல்லாமல் நடத்த தேசிய தேர்வு முகமை (என்டிஏ) தயாராகி வருகிறது. வினாத்தாள் கசிவதைத் தடுக்கவும், நீட் தேர்வு செயல்முறையின் மீது மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்தவும் இதுவரை இல்லாத அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகளை என்டிஏ அறிமுகப்படுத்தி உள்ளது.
குறிப்பாக டெலிகிராம் செயலிக்கு தடை மற்றும் வினாத்தாள்களைக் கொண்டு செல்ல இந்திய விமானப் படை சேவையைப் பயன்படுத்தப்படுவது உள்ளிட்ட முக்கிய நடவடிக்கைகளின் விவரம் வருமாறு: கடந்த நீட் தேர்வின் போது ஒரு கும்பல் டெலிகிராம் செயலியைப் பயன்படுத்தி வினாத்தாள்களைக் கசியவிட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மீண்டும் அதுபோல் ஒரு சம்பவம் நிகழ்வதைத் தடுக்க, ஜூன் 22ம் தேதி வரை இந்தியாவில் டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு தற்காலிகமாகத் தடை விதித்துள்ளது.
நீட் வினாத்தாள் தயாரிப்பில் ஈடுபட்ட அனைத்துப் பணியாளர்களும் ஜூன் 21-ம் தேதி வரை தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். அவர்களை யாரும் தொடர்பு கொள்ள முடியாதபடி ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டு, கண்காணிப்பில் உள்ளனர். அவர்கள் செல்போன், லேப்டாப் மற்றும் தனிப்பட்ட தகவல் தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்த அனுமதி இல்லை. இணைய வசதி மற்றும் வெளி உலகத் தொடர்புகள் கடும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.
நீட் வினாத்தாள்களைப் பாதுகாப்பாகக் கொண்டு செல்வதற்காக, முதல் முறையாக இந்திய விமானப் படை (ஐஏஎப்) ஈடுபடுத்தப்பட உள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஜூன் 7 தேதியிட்ட உத்தரவின்படி, வினாத்தாள்கள் அதன் உற்பத்தி மையங்களில் இருந்து புறப்பட்டது முதல் பயணம் முழுவதும் மாநில போலீஸாரின் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படும்.
மேலும், ஹைதராபாத் மற்றும் அகமதாபாத் ஆகிய முதன்மை மையங்களில் இருந்து தேர்வு நடத்தப்படும் 551 நகரங்களின் மையங்கள் வரையிலான ஒட்டுமொத்த பயணத்திலும் சிஐஎஸ்எஃப் மற்றும் சிஆர்பிஎஃப் வீரர்கள் தீவிரமாகப் பாதுகாப்பார்கள். இவ்விரு படைகளும் தங்களின் சிறப்புப் பிரிவு வீரர்களை இதற்காக வழங்கியுள்ளன.
தேர்வு செயல்முறை முழுவதும் தொடர்ச்சியான கண்காணிப்பை உறுதி செய்ய, என்டிஏ பல அடுக்கு பாதுகாப்பு உள்கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. தேர்வு மையங்கள் முழுவதும் 5 லட்சத்துக்கும் அதிகமான பாதுகாப்புப் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர்.


















