
சாமராஜநகர்: ஜூன் 19-
கொள்ளேகாலம் அருகே முடிகுண்டா பாலம் பகுதியில் நேற்று இரவு கார் ஒன்று மின்னல் வேகத்தில் சென்றுகொண்டிருந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், எதிர்பாராதவிதமாக பாலத்தின் அருகே பயங்கரமாக விபத்துக்குள்ளானது.இந்த கொடூர விபத்தில் கார் அப்பளம்போல் நொறுங்கியது. இதில் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி கொள்ளேகாலம் கோர்ட்டு சிரஸ்தேதார் (முதன்மை அதிகாரி) நஞ்சுண்டப்பா மற்றும் கோர்ட்டு ஊழியர் யமுனப்பா ஆகிய இருவரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர்.மேலும் காரில் இருந்த கிருஷ்ணப்பா, லோகேஷ், சங்கரப்பா ஆகிய 3 பேர் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினர். விபத்து பற்றி தகவல் அறிந்ததும் கொள்ளேகாலம் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக உள்ளூர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.பலியான 2 பேரின் பிணங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொள்ளேகாலம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் விபத்துக்குள்ளான காரை பறிமுதல் செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.


















