Home மாவட்டங்கள் பெங்களூர் கோர விபத்து – கணவன் மனைவி குழந்தை சாவு

கோர விபத்து – கணவன் மனைவி குழந்தை சாவு

பெங்களூரு: ஜூன் 20-
பெங்களூரு அருகே அதிவேகமாக வந்த பிஎம்டிசி அரசு பேருந்து மோதியதில், பைக்கில் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும் 2 வயது குழந்தை ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். 5 வயது சிறுமி பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடி வருகிறார்.
தேவனஹள்ளி தாலுகா தெல்லஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் அருண் (வயது 35). இவரது மனைவி அனுஷா (32). இவர்களது 2 வயது குழந்தை ஹர்னா. இவர்கள் அனைவரும் நேற்று பைக்கில் ஒசக்கோட்டே தாலுகா சூலிபெலே அருகே சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, ஒசக்கோட்டே – தேவனஹள்ளி வழித்தடத்தில் வந்த பிஎம்டிசி பேருந்து, எதிர்பாராத விதமாக தவறான பாதையில் அதிவேகமாக வந்து பைக் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.
இந்த கோர விபத்தில் நிலைதடுமாறி விழுந்த அருண், அனுஷா மற்றும் குழந்தை ஹர்னா ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பைக்கில் இருந்த 5 வயது சிறுமி அனுஷிகா படுகாயமடைந்தார். விபத்தை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து காரணமாக ஒசக்கோட்டே – தேவனஹள்ளி சாலையில் சில மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். தகவல் அறிந்து வந்த சூலிபெலே போலீசார், உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து குறித்து டி.வய்.எஸ்.பி மல்லேஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில்:
அரசு பேருந்து ஓட்டுநரின் அலட்சியமே இந்த விபத்துக்குக் காரணம். இந்த சாலையில் குடோன்கள் அதிகமாக இருப்பதால், லாரிகளை சாலையிலேயே நிறுத்தி விடுகின்றனர். அதுவும் இந்த விபத்துக்கு ஒரு முக்கிய காரணம். தற்போது சாலையில் நின்ற லாரிகள் அகற்றப்பட்டுள்ளன. இனிமேல் சாலையில் லாரிகளை நிறுத்தக் கூடாது என எச்சரித்துள்ளோம்,” என்றார்.