
லாஸ் ஏஞ்சல்ஸ், ஜூன் 23- பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள சோபி மைதானத்தில் ‘ஜி’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பெல்ஜியம் – ஈரான் அணிகள் மோதின. இந்த ஆட்டம் கோல்களின்றி டிராவில் முடிவடைந்தது. பெல்ஜியம் அணி மொத்தம் 23 முறை கோல் அடிக்க முயற்சித்தது. அதில், 7 முயற்சிகள் இலக்கை நோக்கி பாய்ந்தன. ஆனால் ஈரானின் கோல்கீப்பர் அலிரேசா பெய்ரான்வந்த் 7 முறையும் பெல்ஜியத்தின் கோல் அடிக்கும் கனவைத் தகர்த்தார். குறிப்பாக 2-வது பாதியின் தொடக்கத்தில் பெல்ஜியம் வீரர் மாக்சிம் டி கியூப்பர் அடித்த பந்தை அவர், பாய்ந்தபடி ஒற்றை கையால் தடுத்த விதம் அற்புதமானதாக இருந்தது. 84-வது நிமிடத்திலும் டி கியூப்பரின் கோல் அடிக்கும் முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டார் பெய்ரான்வந்த். முன்னதாக ஆட்டத்தின் 24-வது நிமிடத்தில் ஈரானின் மெஹ்தி தாரெமி ஃப்ரீ-கிக் வாய்ப்பைப் பயன்படுத்தி கோல் அடித்தார். ஆனால் வீடியோ அசிஸ்டெண்ட் ரெஃப்ரீ (விஏஆர்) சோதனையில் அது ஆஃப்சைட் என அறிவிக்கப்பட்டு கோல் மறுக்கப்பட்டது. 66-வது நிமிடத்தில் பெல்ஜியம் அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது. ஈரானின் மெஹ்தி தாரெமியை பின்னால் இருந்து இழுத்து கீழே தள்ளியதற்காக பெல்ஜியத்தின் சென்டர்-பேக் டிஃபென்டர் நாதன் கோய் நேரடியாக சிவப்பு அட்டை காட்டப்பட்டு மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். இதனால் ஆட்டத்தின் கடைசி 25 நிமிடங்கள் பெல்ஜியம் 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டது. எனினும் இந்த பகுதியில் ஈரானிடம் இருந்து கோல் வாங்காமலும் பெல்ஜியம் அணி பார்த்துக் கொண்டது. ஆட்டத்தின் முதல் 60 நிமிடங்களில் பெல்ஜியம் அணி பந்தை முழுமையாகத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும், ஈரான் அணி அதற்கு இணையாக எதிர்-தாக்குதல்களை தொடுத்தது. ஈரான் கோல்கீப்பர் பெய்ரான்வந்த் ஆக்ரோஷமாகவும் வியத்தகு முறையிலும் பந்துகளைத் தடுத்தார் என்றால், அதற்குச் சற்றும் சளைக்காமல் பெல்ஜியத்தின் கோல்கீப்பர் திபோ கோர்ட்வா அமைதியாகவும் துல்லியமாகவும் செயல்பட்டு ஈரானின் கோல் முயற்சிகளை முறியடித்தார். பெய்ரான்வந்தின் அசாத்தியமான செயல் திறன்களுக்கு நிகராக கோர்ட்வாவும் பல ஆபத்தான பந்துகளைத் தடுத்து பெல்ஜியம் அணிக்கு அரணாக விளங்கினார்.





















