Home செய்திகள் தேசிய செய்திகள் ஹார்முஸை கடந்து இந்தியா வரும் 11 கப்பல்கள் பல லட்சம் டன் கச்சா எண்ணெய்

ஹார்முஸை கடந்து இந்தியா வரும் 11 கப்பல்கள் பல லட்சம் டன் கச்சா எண்ணெய்

டெல்லி: ஜூன் 24-
மத்திய கிழக்கு ஆசியாவில் நிலவி வந்த போர் பதற்றத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், அமெரிக்கா -ஈரான் இடையே கையெழுத்தான வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, ஹார்முஸ் ஜலசந்தி வழியாகக் கப்பல் போக்குவரத்து மீண்டும் முழு வீச்சில் சீரடையத் தொடங்கியுள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகு இதுவரை மட்டும் 11 கப்பல்கள் ஹார்முஸை கடந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
வளைகுடாவில் கடந்த பிப்ரவரி மாதம் முதலே ஒரு பதற்றமான சூழல் நிலவி வந்தது. அமெரிக்கா ஈரான் இடையே வெடித்த போர் இரு நாடுகளை மட்டுமின்றி சர்வதேச அளவிலும் மோசமான ஒரு பாதிப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக ஹார்முஸ் முடங்கியதால் சர்வதேச கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, கச்சா எண்ணெய் விலை எக்குத்தப்பாக உயர்ந்தது.
இதனால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இந்தச் சூழலில் தான் அமெரிக்கா ஈரான் இடையே மிக முக்கியமான இடைக்கால அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த புதிய அமைதி ஒப்பந்தத்தின்படி, இருதரப்பும் தங்களது ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தியதோடு, ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க ஒப்புக்கொள்ளப்பட்டது. மேலும், ஈரான் துறைமுகங்கள் மீதான அமெரிக்கக் கடற்படையின் முற்றுகையை முழுமையாக விலக்கிக் கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ஹார்முஸில் இப்போது கப்பல் போக்குவரத்து மெல்ல சீரடைந்து வருகிறது. அமைதி ஒப்பந்தத்திற்குப் பிறகு பல கப்பல்கள் பாதுகாப்பாக ஹார்முஸை கடந்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இதுகுறித்து விரிவான விவரங்களைப் பகிர்ந்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் ஊடக செய்தித் தொடர்பாளர் ரண்தீர் ஜெய்ஸ்வால் பகிர்ந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், “ஜூன் 17ம் தேதி அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானதில் இருந்து இந்தியாவை நோக்கி வந்துகொண்டிருந்த 11 வணிகக் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியைப் பாதுகாப்பாகக் கடந்துள்ளது. தலா 2.85 லட்சம் மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான கச்சா எண்ணெய்யைச் சுமந்து வந்த 3 டாங்கர்கள், 1 வெளிநாட்டு எல்பிஜி கேரியர், 1 வெளிநாட்டு கச்சா எண்ணெய் டாங்கர் மற்றும் உரம் ஏற்றி வந்த 6 வெளிநாட்டுச் சரக்குக் கப்பல்கள் பாதுகாப்பாகக் கடந்துள்ளன. இன்னுமே இந்தியாவைச் சேர்ந்த 10 கப்பல்கள் வளைகுடாப் பகுதியில் உள்ளன. மேலும், சமீபத்தில் 2 புதிய இந்தியக் கப்பல்களும் அங்கு சென்றுள்ளன. இந்த எஞ்சியுள்ள இந்தியக் கப்பல்களும் விரைவில் ஹார்முஸ் எல்லையைத் தாண்டிவிடும் என நம்புகிறோம்” என்றார். மத்திய அரசு ஈரான் கச்சா எண்ணெய் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்குவதற்கு அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக வெளியான தகவல் குறித்த கேள்விக்கு, “மத்திய கிழக்கில் நடக்கும் அனைத்து விபரங்களையும் இந்தியா உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. மேலும், இந்தியாவின் எரிசக்தித் தேவை மற்றும் கச்சா எண்ணெய் இறக்குமதியைப் பொறுத்தவரை, எங்களது வெளியுறவுக் கொள்கை எப்போதுமே தேசிய நலன் சார்ந்ததாக மட்டுமே இருக்கும். இந்தியாவின் 140 கோடி மக்களுக்கும் மலிவான விலையில் தடையின்றி எரிசக்தி கிடைப்பதை உறுதி செய்வதே எங்களின் முதல் நோக்கம்! பாலஸ்தீனம் பாலஸ்தீன நாட்டுடன் இந்தியா பல ஆண்டுகளாக நல்லுறவைப் பேணி வருகிறது. இந்த இருதரப்பு உடன்படிக்கை மூலமாகவும், ஐநா வழியாகவும் பாலஸ்தீன மக்களுக்குப் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும், மனிதாபிமான உதவிகளையும் இந்தியா தொடர்ச்சியாக வழங்கி வருகிறது. இது எதிர்காலத்திலும் நீடிக்கும். அதேபோல், இந்தியா மற்றும் அமீரகம் இடையேயான ராணுவ மற்றும் பாதுகாப்பு உறவுகள் தொடர்ந்து மேம்பட்டு வருகிறது” என்றார்.