Home மாவட்டங்கள் பெங்களூர் பிரஜ்வலிடம் செல்போன், பென்டிரைவ் பறிமுதல்: சிறை அதிகாரி நீக்கம்

பிரஜ்வலிடம் செல்போன், பென்டிரைவ் பறிமுதல்: சிறை அதிகாரி நீக்கம்

பெங்களூரு: ஆக. 13-
ஆயுள் தண்டனை கைதியாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா, பல நாட்களாக சிறைக்குள் ரகசியமாக செல்போன் பயன்படுத்தி வந்தது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
பிரஜ்வலுக்கு லஞ்சம் பெற்றுக்கொண்டு செல்போன் பயன்படுத்த உதவி செய்ததாக சிறை உதவி கண்காணிப்பாளர் ஈரணா ரங்காபுரா மீது திடுக்கிடும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வழக்கமாக சிறையில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்த வரும்போது, சோதனைக் குழுவினரை உள்ளே விடாமல் 15 முதல் 20 நிமிடங்கள் வரை ஈரணா தாமதப்படுத்துவாராம். அதற்குள் கைதிகள் உஷாராகி, தங்களோடிருக்கும் தடை செய்யப்பட்ட பொருட்களைப் ஒளித்து வைத்து விடுவார்கள்.
ஆனால், 3 நாட்களுக்கு முன்பு சோதனைக்கு வந்த குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீசார், ஈரணாவின் பேச்சைக் கேட்காமல் அதிரடியாக சிறைக்குள் புகுந்தனர். அதில், பிரஜ்வல் ரேவண்ணாவின் அறை (பயாரக்) உட்பட பல இடங்களில் செல்போன்கள் சிக்கின. இதையடுத்து உதவி கண்காணிப்பாளர் ஈரணா உடனடியாக பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளார்.

சோதனையின் போது பிரஜ்வல்லின் அறையிலிருந்து செல்போன், பென்டிரைவ் மற்றும் ஒரு நோட்புக் கைப்பற்றப்பட்டது. அந்த நோட்புக்கில் 30-க்கும் மேற்பட்ட முக்கிய தொலைபேசி எண்கள் எழுதப்பட்டிருந்தன. அதில் தனது தாயாரின் எண்ணை “பார்வதி” என்றும், தந்தையின் எண்ணை “சிவப்பா” என்றும், தனது பெண் தோழியின் எண்ணையும் பிரஜ்வல் ரகசியக் குறியீடாக எழுதி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுவரை தனது செல்போனின் பாஸ்வேர்டை பிரஜ்வல் போலீசாரிடம் கூற மறுத்து வருகிறார். மேலும், “இந்த செல்போன் என்னுடையது அல்ல; எனது அறைக்கு இது எப்படி வந்தது என்றே எனக்குத் தெரியாது” என அவர் சாதித்து வருவதாகக் கூறப்படுகிறது. கைப்பற்றப்பட்ட செல்போனைப் பறிமுதல் செய்துள்ள எலக்ட்ரானிக் சிட்டி பிரிவு போலீசார், இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.