
புதுடெல்லி, ஆக. 13- ஜார்க்கண்ட் மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் தேர்வு வாரியம் நடத்திய போட்டித் தேர்வுகளில் முறைகேடு நடந்ததாகக் கூறி அம்மாநில மாணவர்கள் தீவிரப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து திரையுலகப் பிரபலங்கள் மவுனமாக இருப்பதாக மூத்த நடிகர் நசிருதீன் ஷா விமர்சித்தார். “வாயில் எலும்புத் துண்டு இருக்கும் வரை நாய்கள் குரைக்காது, அது கீழே விழும்போதுதான் குரைக்கத் தொடங்கும்” என்று திரையுலகினரை அவர் கடுமையாகச் சாடினார். தலைநகர் ராஞ்சியில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்த நடிகர் பியூஷ் மிஷ்ரா, “இப்போது எந்த ‘நாய்கள்’ வாயில் எலும்புத் துண்டை கவ்விக்கொண்டு அமைதியாக இருக்கின்றன?” என்று நசிருதீனுக்கு கேள்வி எழுப்பினார். நடிகர் பியூஷ் மிஷ்ராவின் கருத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள கங்கனா ரனாவத், “எல்லோரும் யாரோ ஒருவருக்கு நாயாகவே இருக்கிறார்கள். ஆனால் எனக்கு உணவளிக்கும் தாய்நாட்டுக்கு உண்மையுள்ள நாயாக இருப்பதில் பெருமையடைகிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் “நசிருதீன் இந்த நாட்டின் உணவைச் சாப்பிட்டுவிட்டு, பக்கத்து நாட்டுக்காகப் போராடுகிறார்” என்று கூறிய கங்கனா, அவரை ‘நரி’ என்றும் கடுமையாகச் சாடினார்.














