
பெங்களூரு: ஆக. 13- கர்நாடக பந்த் அழைப்பு விடுத்திருந்த கன்னட அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வட பகுதி போலீசார் கைது செய்து காவலில் எடுத்தனர்.
போலீசார் தனது வீட்டுக்கு வந்ததும், வாட்டாள் நாகராஜ் தனது வீட்டு கேட் உட்புறமாகவே அமர்ந்து அடம்பிடித்தார். “நான் வீட்டை விட்டு வெளியே வரமாட்டேன். கைது செய்யப்படுவதற்காக வெளியே வர முடியாது” என உறுதியாகக் கூறினார்.
காவிரி நீர் பங்கீட்டு விவகாரத்தில் அரசின் நிலைப்பாட்டைக் கண்டித்து, வாட்டாள் நாகராஜ் தனது வாயில் செல்லோ டேப் (பிளாஸ்டர்) ஒட்டிக் கொண்டு விசித்திரமான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டார்
போராட்டத்தைத் தடுக்க வந்த துணை கமிஷனர் நேமகவுடா மற்றும் உதவி கமிஷனர் தன்வீர் தலைமையிலான போலீஸ் அதிகாரிகள் குழு, சுமார் அரை மணி நேரமாக வாட்டாள் நாகராஜிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்த முயன்றது. ஆனால், அரசின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த வாட்டாள் நாகராஜ், அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு மசியவில்லை.
போலீசாரின் பேச்சுவார்த்தைக்கு அவர் சம்மதிக்காததால், வேறு வழியின்றி போலீசார் வாட்டாள் நாகராஜை சம்பவ இடத்திலேயே கைது செய்து அழைத்துச் சென்றனர்.
பந்த் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், வாட்டாள் நாகராஜின் டாலர்ஸ் காலனி வீட்டின் முன்பாக இன்று காலை முதலே அதிக எண்ணிக்கையிலான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அவர் டவுன் ஹாலுக்குச் சென்று போராட்ட ஊர்வலத்தில் பங்கேற்கப் புறப்பட்ட உடனேயே அவரை கைது செய்ய போலீசார் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர்.
இன்று காலையிலேயே வாட்டாள் நாகராஜின் வீட்டுக்கு வந்திருந்த அவரது ஆதரவாளர் நாராயண் உள்பட பல தொண்டர்களை போலீசார் உடனடியாகக் கைது செய்து ரோந்து வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.
போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்த ஆதரவாளர்கள், அரசும் காவல்துறையும் இணைந்து கன்னட ஆதரவு போராட்டத்தை அடக்க முயல்வதாகக் குற்றம் சாட்டினர்.













