
மியாமி, ஜூன் 26- உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் குரூப் சி ஆட்டத்தில் பிரேசில் அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஸ்காட்லாந்து அணியை தோற்கடித்து நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது. பிரேசில் வீரர் வினிசியஸ் ஜூனியர் அசத்தலாக விளையாடி 2 கோல்களை அடித்தார். இந்த ஆட்டம் மியாமியிலுள்ள ஹார்ட் ராக் மைதானத்தில் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு நடைபெற்றது. முதல் ஆட்டத்தில் டிரா, 2-வது ஆட்டத்தில் வெற்றி பெற்றிருந்த நிலையில் பிரேசில் அணி நேற்று 3-வது ஆட்டத்தில் களம்புகுந்தது. பிரேசிலின் அனுபவம் வாய்ந்த வீரர்கள், ஸ்காட்லாந்து வீரர்களின் தடுப்பு அரணை உடைத்துச் செல்வதில் எளிதில் வெற்றி பெற்றனர். ஆட்டத்தின் 7-வது நிமிடத்திலேயே பிரேசில் வீரர் வினிசியஸ் ஜூனியர் ஒரு கோலடித்து அணியின் கணக்கைத் தொடங்கி வைத்தார். பிரேசில் வீரர் ராயன் கடத்திக் கொண்டு வந்த பந்தை எளிதாக கோலாக மாற்றினார் வினிசியஸ் ஜூனியர். இதனால் 1-0 என்ற கணக்கில் பிரேசில் முன்னிலை பெற்றது. 25-வது நிமிடத்தின்போது பிரேசில் மற்றுமொரு கோலை அடித்தது. ஆனால் அது ஆப்-சைடு என நடுவரால் அறிவிக்கப்பட்டது. முதல் பாதியில் காயங்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்ட நேரத்தில் மற்றொரு கோலை அடித்தார் வினிசியஸ் ஜூனியர். பிரேசில் வீரர் புரூனோ குய்மாரஸ் அபாரமாக கிராஸ் செய்த பந்தை, அற்புதமான கோலாக மாற்றினார் வினிசியஸ் ஜூனியர். இதனால் முதல் பாதியில் பிரேசில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. 2-வது பாதி தொடங்கியதும் மற்றொரு கோலை அடித்தது பிரேசில். இந்த முறையும் கோலடிக்க உதவி செய்தார் புரூனோ குய்மாரஸ். குய்மாரஸ் கடத்திக் கொண்டு கிராஸ் செய்த பந்தை, ஸ்காட்லாந்து கோல்கீப்பரை ஏமாற்றி மத்தேயஸ் குன்ஹா கோலாக்கினார். இதனால் பிரேசில் 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.





















