
சென்னை: ஜூலை 1-
நெடுஞ்சாலைப் பணிகளை மேற்கொள்ளாமலே ஒப்பந்ததாரர்கள் ரூ.3.23 கோடி பெற்றதாக எழுந்த புகார் தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, அரசு அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் உட்பட 11 பேர் மீது சென்னை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் கடந்த 24-ம் தேதி வழக்குப் பதிவு செய்தனர்.
இதையடுத்து, 25-ம் தேதி எ.வ. வேலு மற்றும் சம்பந்தப்பட்டவர்களின் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. சென்னையில் 4 இடங்கள், திருவண்ணாமலை – 4, கரூர் – 7, திண்டுக்கல் – 2, கோவை – 2, திருப்பூர் – 1 என மொத்தம் 20 இடங்களில் சோதனை நடந்தது.
இந்த சோதனையின்போது, நெடுஞ்சாலைத் துறை தொடர்பான முக்கிய ஆவணங்கள், டிஜிட்டல் சான்றுகள், சொத்து மதிப்பு மற்றும் முறைகேட்டை உறுதிப்படுத்தும் பல்வேறு முக்கிய ஆவணங்கள், கணக்கில் வராத ரூ.40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், மேல் விசாரணை தீவிரமாக நடந்து வருவதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இந்த வழக்கு விவகாரம் தொடர்பாக ஓரிரு நாளில் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என எ.வ.வேலுவுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சம்மன் அனுப்பி உள்ளனர்.


















