
ஹிங்கோலி, ஆகஸ்ட் 19- மகாராஷ்டிர மாநிலம், ஹிங்கோலி மாவட்டத்தில் உள்ள தனது சொந்த கிராமத்தில் இருந்து ‘பள்ளியைச் சரி செய்யுங்கள்’ என்ற பிரச்சாரத்தை, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) நிறுவனர் அபிஜித் திப்கே கடந்த வாரம் தொடங்கினார். கிராமப்புற மற்றும் பழங்குடியினப் பள்ளிகளின் நிலைமையை மேம்படுத்துவதே இந்தப் பிரச்சாரத்தின் நோக்கம் ஆகும். இந்நிலையில், ஹிங்கோலியில் பள்ளிகள் தொடர்பான பிரச்சினைகளை வலியுறுத்தி நேற்று நடைபெற்ற போராட்டத்தின் போது, அபிஜித் திப்கே செய்தியாளர்களிடம் கூறியதாவது: அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள், எம்பி-க்கள் தங்களது குழந்தைகளை ஒரு நாள் கிராமப்புறப் பள்ளிக்கு அனுப்ப வேண்டும். கிராமத்து குழந்தைகளைப் போலவே அவர்களையும் நடந்து பள்ளிக்குச் செல்லும்படி செய்ய வேண்டும். அப்போதுதான், அந்தக் குழந்தைகள் எதிர்கொள்ளும் சிரமங்களை அவர்கள் புரிந்து கொள்வார்கள். பழங்குடியின மற்றும் ஏழை சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகளின் பாதுகாப்பையும், கண்ணியத்தையும் அரசு உறுதி செய்ய வேண்டும். ஒரு பழங்குடியினக் குழந்தையின் உயிருக்கும், அமைச்சரின் குழந்தையின் உயிருக்கும் ஒரே மதிப்புதான் இருக்க வேண்டும். அந்தக் குழந்தையின் உயிர் எந்த வகையிலும் குறைந்த மதிப்புடையது அல்ல. மக்கள் ஒருவருக்கொருவர் சண்டையிடும் வகையில் தூண்டப்படுகிறார்கள். அதன்மூலம், ஆட்சியில் இருப்பவர்கள் பயனடைகிறார்கள். பாதிக்கப்படுவது நாம்தான். கல்வி கிடைக்காதது நமது குழந்தைகளுக்குத்தான். அரசியல் தலைவர்களின் குழந்தைகள் வெளிநாடுகளில்கூட கல்வி வாய்ப்புகளைப் பெறும் நிலையில், கிராமப்புறக் குழந்தைகள் அடிப்படைப் பள்ளி வசதிகளுக்காக போராட வேண்டி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.













