Home செய்திகள் தேசிய செய்திகள் எல் நினோ தாக்கம், மேற்காசிய போரால் பொருளாதார வளர்ச்சி 6.8 சதவிகிதமாக குறையும்

எல் நினோ தாக்கம், மேற்காசிய போரால் பொருளாதார வளர்ச்சி 6.8 சதவிகிதமாக குறையும்

புதுடில்லி, ஆகஸ்ட் 19- மேற்காசிய போர், உணவு மற்றும் எரிபொருள் பணவீக்கம், ரூபாய் மதிப்பு சரிவு மற்றும் எல் நினோவின் தாக்கம் காரணமாக, நடப்பு 2026 – 27ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.80 சதவீதமாக குறையும் என இந்தியா ரேட்டிங்ஸ் அண்டு ரிசர்ச் நிறுவனம் கணிப்பில் தெரிவித்துள்ளது. இது குறித்து கூறியிருப்பதாவது: கடந்த 2025 — 26ம் நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.60 சதவீதமாக இருந்த நிலையில், நடப்பு நிதியாண்டில் 6.80 சதவீதமாக குறையும். எனினும், கடந்த மே மாதம் கணிக்கப்பட்ட 6.70 சதவீதத்தை விட தற்போதைய கணிப்பு சற்று அதிகரித்துள்ளது. ரூபாய் மதிப்பு சரிவு மற்றும் எல் நினோ காரணமாக வேளாண் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளதும் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கலாம். கச்சா எண்ணெய் விலை குறைவதால், வர்த்தக பற்றாக்குறை மற்றும் நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைத்து பொருளாதாரத்துக்கு சாதகமாக அமையும். ஆனால், எல் நினோ காரணமாக பணவீக்கம் அதிகரித்தால், குறைந்த எண்ணெய் விலையால் கிடைக்கும் வளர்ச்சி சாதகம் குறையக்கூடும். நடப்பு நிதியாண்டில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் சராசரி மதிப்பு 93.98 ரூபாயாக இருக்கும். முன்னதாக 94.28 ரூபாயாக இருக்கும் என கணிக்கப்பட்டிருந்தது. இது ஆண்டுக்கு 6.40 சதவீத ரூபாய் மதிப்பு சரிவை குறிக்கிறது. கடந்த நிதியாண்டில் 2 சதவீதமாக இருந்த சில்லரை பணவீக்கம், நடப்பு நிதியாண்டில் சராசரியாக 4.90 சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு கணிப்பில் தெரிவித்துள்ளது.