Home செய்திகள் உலக செய்திகள் ட்ரம்ப்பின் பேச்சு ஈரான் – அமெரிக்கா உறவில் புதிய திருப்பம்

ட்ரம்ப்பின் பேச்சு ஈரான் – அமெரிக்கா உறவில் புதிய திருப்பம்

தோஹா: ஜூலை 2-
ஈரானுடனான போர்நிறுத்த பேச்சுவார்த்தையில் மிக நல்ல முறையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி உள்ளார்.மேலும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு, போர்நிறுத்த முயற்சிகள் மற்றும் அணு ஆயுத ஒழிப்பு தொடர்பான நடவடிக்கைகள் நல்ல பலனைத் தரும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், கத்தாரில் ஈரானுடன் நடைபெற்று வரும் மறைமுக பேச்சுவார்த்தைகளில் மிக நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். பேச்சுவார்த்தைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இருந்தாலும், ஈரானின் செயல்பாடுகளைப் பொறுத்தே அடுத்தகட்ட நடவடிக்கைகள் இருக்கும் என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் மற்றும் டிரம்ப் ஆகிய இருவருமே கூறி இருக்கிறார்கள்.
தெஹ்ரான் தூதுக்குழுவிற்குத் தலைமை தாங்கிய ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் காசெம் கரிபாபாடி, பேச்சுவார்த்தைகள் அடுத்த கட்டத்தை எட்டி இருப்பதாகவும், தங்களின் ஆரம்ப புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மீறல்களைப் பதிவு செய்வதற்கும் அறிக்கை அளிப்பதற்கும் ஒரு தகவல் தொடர்பு வழியை நிறுவ இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்தார்.
ஈரானுடனான மறைமுக பேச்சுவார்த்தை சிறப்பாக நடந்து வருவதாகவும், இரு நாடுகளும் நல்ல சுமுகமான உறவை நோக்கி நகர்வதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ள கருத்து சர்வதேச அளவில் மிகுந்த கவனம் பெற்றுள்ளது. மேலும் இந்த ராஜதந்திர பேச்சுவார்த்தை காரணமாக, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து, பெட்ரோல் விலையும் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.