Home செய்திகள் உலக செய்திகள் ஸ்வீடனை வீழ்த்தியது பிரான்ஸ்: 3-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி

ஸ்வீடனை வீழ்த்தியது பிரான்ஸ்: 3-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி

ஈஸ்ட் ரூதர்போர்டு: பிஃபா கால்பந்து தொடரில் அமெரிக்காவின் ஈஸ்ட் ரூதர்போர்டில் உள்ள நியூ ஜெர்சி மைதானத்தில் நேற்று நடைபெற்ற நாக் அவுட் சுற்று ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான பிரான்ஸ், ஸ்வீடனை எதிர்த்து விளையாடியது. 45-வது நிமிடத்தில் பிரான்ஸ் அணி முதல் கோலை அடித்தது. பெனால்டி பாக்ஸின் விளிம்பிலிருந்து ஒலிஸே அடித்த தாழ்வான ஷாட்டை ஸ்வீடன் கோல்கீப்பர் ஜெட்டர்ஸ்ட்ரோம் தட்டிவிட்டார்.
அதன் மூலம் கிடைத்த கார்னர் வாய்ப்பை பிரான்ஸ் அணி சாதுரியமாக ஷார்ட் கார்னராக மாற்றியது. இதில் மைக்கேல் ஒலிஸே, உமான் டெம்பலே, கிலியன் எம்பாப்பே ஆகிய மூவரும் இணைந்து பந்தை கடத்தினர். இறுதியில் பாக்ஸிற்குள் பந்தைப் பெற்ற எம்பாப்பே, எதிரணி டிஃபென்டரை மிக அழகாக ஏமாற்றி, கோல் வலைக்குள் பந்தை திணித்தார். இதனால் பிரான்ஸ் அணி முதல் பாதி ஆட்டத்தில் 1-0 என முன்னிலை பெற்றது.
2-வது பாதி ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் பிரான்ஸ் அணி 2-வது கோலை அடித்தது. மிட்ஃபீல்டில் ஸ்வீடன் அணி தவறவிட்ட பந்தை பிரான்ஸ் அணியின் வீரர் சுவாமேனி சாதுரியமாக தடுத்தி நிறுத்தி, ஒலிஸேவிடம் சேர்த்தார்.
அவர், ஸ்வீடன் டிஃபென்டரின் கால்களுக்கு இடையே பந்தை மிகத் துல்லியமாக பாஸ் செய்து பாக்ஸிற்குள் இருந்த பிராட்லி பார்கோலாவுக்கு அனுப்பினார். பந்தை கட்டுப்படுத்திய பிராட்லி பார்கோலா கோல்கீப்பர் ஜெட்டர்ஸ்ட்ரோமை ஏமாற்றி வலைக்குள் திணித்தார். இதனால் பிரான்ஸ் அணி 2-0 என்ற முன்னிலையை நோக்கி நகர்ந்தது.
74-வது நிமிடத்தில் மைக்கேல் ஒலிஸே ஸ்வீடன் அணியின் டிஃபென்ஸைத் தகர்த்து துல்லியமாக பந்தை கிலியன் எம்பாப்வேவுக்கு பாஸ் செய்தார். எம்பாப்பே ஆஃப்சைட் ஆகாமல் சரியான நேரத்தில் ஓடிவந்து பந்தை கைப்பற்றி தனக்கே உரிய தனித்துவமான பாணியில் கோல் அடித்து அசத்தினார். இதனால் பிரான்ஸ் அணி 3-0 என வலுவான நிலையை எட்டியது. கடைசி வரை போராடியும் ஸ்வீடன் அணியால் கோல் அடிக்க முடியாமல் போனது. முடிவில் பிரான்ஸ் அணி அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்கு முன்னேறியது.
‘நாக் அவுட் சுற்றில்
10 கோல்’ நடப்பு உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற நாக் அவுட் சுற்றில் ஸ்வீடன் அணிக்கு எதிராக பிரான்ஸ் அணியின் நட்சத்திரமான கிலியன் எம்பாப்பே 2 கோல்கள் அடித்தார்.
இதுவரை உலகக் கோப்பை தொடரின் நாக் அவுட் சுற்றுகளில் மட்டும் எம்பாப்வே 10 கோல்களை அடித்துள்ளார். இதன் மூலம் உலகக்கோப்பையின் நாக்-அவுட் சுற்றில் அதிக கோல்கள் (9 கோல்கள்) அடித்திருந்த பிரேசிலின் சிறந்த வீரர்களான லியோனிடாஸ் மற்றும் ரொனால்டோ ஆகியோரின் சாதனையை எம்பாப்வே முறியடித்தார்.