Home மாவட்டங்கள் பெங்களூர் பாட்டியை கொன்ற பேரனைகாலில் சுட்டுப் பிடித்த போலீசார்

பாட்டியை கொன்ற பேரனைகாலில் சுட்டுப் பிடித்த போலீசார்

சிவமொக்கா: ஜூலை 2-
கஞ்சா விற்பதை எதிர்த்து போலீசில் புகார் அளிக்கச் சென்ற 65 வயது பாட்டியை, கொடூரமான முறையில் தலையில் கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்த பேரனை, போலீசார் காலில் சுட்டுப் பிடித்த துணிகர சம்பவம் கர்நாடக மாநிலம் சிவமொக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவமொக்கா பேருந்து நிலையம் பின்புறம் உள்ள மஞ்சுநாதா லேஅவுட்டைச் சேர்ந்தவர் சுசீலம்மா (65). இவரது மூத்த மகளின் மகன் கிஷோர் (35). கஞ்சாவுக்கு அடிமையான கிஷோர், நேற்று மாலை பாட்டி சுசீலம்மாவின் வீட்டிற்கு சிலரை அழைத்து வந்து கஞ்சா பொட்டலம் மடித்துள்ளார். இதனை சுசீலம்மா கண்டித்ததால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஆத்திரமடைந்த சுசீலம்மா இதுகுறித்து போலீசில் புகார் அளிக்க தொட்டபேட்டே காவல் நிலையத்தை நோக்கி நடந்து சென்றுள்ளார். அப்போது பைக்கில் துரத்தி வந்த கிஷோர், பாட்டி மீது மோதி கீழே தள்ளியுள்ளார். பின்னர் சாலையோரம் கிடந்த ராட்சத கல்லை தூக்கி, கீழே விழுந்த பாட்டியின் தலையில் போட்டுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சுசீலம்மா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கொலை செய்துவிட்டு தப்பியோடிய கிஷோர், துங்கா நகர் காவல் எல்லைக்குட்பட்ட வாஜ்பாய் லேஅவுட்டில் பதுங்கியிருப்பதாக தொட்டபேட்டே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் சத்யநாராயண் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று கிஷோரை சரணடையுமாறு எச்சரித்தனர்.
ஆனால், ஆவேசமடைந்த கிஷோர் தன்னை பிடிக்க வந்த போலீஸ் காவலர் கணேஷ் என்பவரை கத்தியால் குத்தி தாக்கினான். போலீசார் வானத்தை நோக்கி சுட்டும் அவன் அடங்காமல் தப்பியோட முயன்றதால், இன்ஸ்பெக்டர் சத்யநாராயண் தற்காப்பிற்காக கிஷோரின் இடது காலில் துப்பாக்கியால் சுட்டார். குண்டு பாய்ந்து சுருண்டு விழுந்த அவனைக் கைது செய்த போலீசார், மெக்கான் அரசு மருத்துவமனையின் சிறை வார்டில் அனுமதித்துள்ளனர். காயமடைந்த காவலர் கணேஷ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கைது செய்யப்பட்டுள்ள கிஷோர் மீது ஏற்கனவே கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை வழக்குகள் உள்ளதும், சிறைக்குச் சென்று வந்தவன் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும், இரண்டு நாட்களுக்கு முன்புதான் தனது மனைவியையும் கொடூரமாக தாக்கியுள்ளான். இதனால் காயமடைந்த அவனது மனைவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவிட்டு தற்போது தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
இச்சம்பவம் குறித்து எஸ்பி நிகில் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். தொட்டபேட்டே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.