
சியாட்டில், ஜூலை 8- பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் நேற்று அமெரிக்காவின் சியாட்டில் மைதானத்தில் பெல்ஜியம் – அமெரிக்கா அணிகள் மோதின. ஆட்டத்தின் 9-வது நிமிடத்தில் பெல்ஜியம் அணி முதல் கோலை அடித்தது. பெல்ஜியம் அணியின் வீரர் லுகேபாக்கியோ வலது பக்கத்திலிருந்து இடது பக்கத்திற்கு கொடுத்த தொலைதூர பாஸ் நேராக ட்ரோஸார்டை சென்றடைந்தது. இதன் பின்னர் ட்ரோஸார்ட் அடித்த கிராஸை அமெரிக்க அணியின் வீரர் ஃப்ரீமேன் தடுத்தார். ஆனால் மற்றொரு அமெரிக்க வீரரான ரிச்சர்ட்ஸ் அதை தலையால் முட்டி விலக்கிவிடத் தவறினார். இந்தத் தவறை சரியாக பயன்படுத்திய பெல்ஜியம் அணியின் நிக்கோலா ரஸ்கின், துள்ளிக் குதித்த பந்தைக் கட்டுப்படுத்தி, 18 அடி தூர பாக்ஸிற்குள் புகுந்து, கோல் போஸ்ட்டின் முகப்பை நோக்கி பந்தை தாழ்வாக பாஸ் செய்தார். அங்கே ஊடுருவி நுழைந்த சார்லஸ் டி கெட்டேலேரே எளிதாக பந்தை கோல் வலைக்குள் தட்டிவிட்டார். இதனால் பெல்ஜியம் அணி 1-0 என முன்னிலை பெற்றது. 31-வது நிமிடத்தில் அமெரிக்கா பதிலடி கொடுத்தது. அமெரிக்க வீரர் மாலிக் தில்மேன் ஃபிரீ-கிக்கில் உதைத்த பந்து, பெல்ஜியம் தற்காப்பு அரண் மீது பலமாகப் பட்டு திசைமாறி கோல்கீப்பரை ஏமாற்றி நேராக கோல்வலையை துளைத்தது. இதனால் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையை எட்டியது. ஆனால் அடுத்த இரு நிமிடங்களில் பெல்ஜியம் அணி கோல் அடித்து மிரட்டியது. 33-வது நிமிடத்தில் பெல்ஜியம் அணியின் யூரி டீலெமன்ஸ் இடது விங்கில் மார்க்கிங் செய்யப்படாமல் இருந்த ட்ரோஸார்டுக்கு பந்தை பாஸ் செய்தார். அவர், பைலைனுக்கு அருகே இருந்து பந்தை பாக்ஸ் பகுதிக்குள் தூக்கி அடித்தார். அங்கு தயாராக இருந்த சார்லஸ் டி கெட்டேலேரே, அமெரிக்க அணியின் டிஃபென்டர்களுக்கு ஊடாக துள்ளியவாறு தலையால் முட்டி பந்தை கோல் வலைக்குள் திணித்தார். இதனால் பெல்ஜியம் அணி முதல் பாதி ஆட்டத்தில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.





















