Home விளையாட்டு 72 ஆண்டுகால அவப்பெயரை துடைத்த சுவிட்சர்லாந்து

72 ஆண்டுகால அவப்பெயரை துடைத்த சுவிட்சர்லாந்து

வான்கூவர், ஜூலை 8- கொலம்பியா அணியை பெனால்டி ஷூட்-அவுட் முறையில் 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சுவிட்சர்லாந்து அணி ஃபிஃபா உலகக்கோப்பை 2026 கால்பந்து தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 போட்டியில் வெற்றி பெற்றது. இதன் மூலம் கடந்த 72 ஆண்டுகளாக உலகக்கோப்பை காலிறுதிக்கு கூட முன்னேறாத அணி என்ற அவப்பெயரை துடைத்து இருக்கிறது சுவிட்சர்லாந்து அணி. வான்கூவரில் நடைபெற்ற இப்போட்டியில் இரு அணிகளும் கடுமையான தடுப்பாட்டத்தைக் கையாண்டதால், ஆட்ட நேரமான 90 நிமிடங்களிலும், கூடுதல் நேரமான 30 நிமிடங்களிலும் இரு அணிகளாலும் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. கொலம்பியா அணி தொடர்ந்து தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும், சுவிட்சர்லாந்து வீரர்கள் தங்களது அரண் போன்ற தடுப்பாட்டத்தால் அதனை முறியடித்தனர். ஆட்டத்தின் 21-வது நிமிடத்தில் கொலம்பியாவின் குஸ்டாவோ புவேர்ட்டா அடித்த பந்தை சுவிட்சர்லாந்து கோல்கீப்பர் கிரிகோர் கோபெல் அபாரமாக தடுத்தார்.
சுவிட்சர்லாந்து தரப்பில் டேனியல் என்டோயே மற்றும் கொலம்பியாவின் ஜான் லுகுமி ஆகியோரின் கோல் முயற்சிகள் நூலிழையில் தவறின. இதனைத் தொடர்ந்து வெற்றியாளரைத் தீர்மானிக்க நடத்தப்பட்ட பெனால்டி ஷூட்-அவுட்டில், சுவிட்சர்லாந்து கோல்கீப்பர் கிரிகோர் கோபெல் மீண்டும் ஒருமுறை ஹீரோவாக உருவெடுத்தார்.