
மெல்போர்ன், ஜூலை 10- ஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடியின் நிகழ்வுகளுக்கு அந்நாட்டு பத்திரிகைகள் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து தலைப்புச் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். ஆஸ்திரேலியா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மெல்போர்னில் நடந்த இந்தியா – ஆஸ்திரேலியா மூன்றாவது உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸை சந்தித்து, இரு தரப்பு உறவுகள் குறித்து முக்கிய பேச்சு நடத்தினார். நம் நாடு துாய்மை எரிசக்தி இலக்கை எட்டும் வகையில், அணுமின் உற்பத்திக்கு தேவையான யுரேனியத்தை நீண்ட காலத்திற்கு வழங்க ஆஸ்திரேலியா முன்வந்துள்ளது. இதற்கான அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம், நம் பிரதமர் நரேந்திர மோடி -ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் முன்னிலையில் நேற்று கையெழுத்தானது. ஆஸ்திரேலியாவிற்கு பிரதமர் மோடி மேற்கொண்ட வரலாற்று சிறப்புமிக்க பயணம் அந்நாட்டு நாளிதழ்களில் தலைப்புச் செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது. ஒரு பத்தியாளர் அவரை “மிஸ்டர் இந்தியா” என்று அழைத்ததோடு, முக்கியப் பத்திரிகைகள் ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீஸுடனான அவரது பேச்சுவார்த்தைகளை முன்னிலைப்படுத்தின. ஆஸ்திரேலிய செய்தித்தாள், பிரதமர் மோடியின் பயணத்தை முன்னிட்டு தனது முதல் பக்கத்தை, “வர்த்தகம், பாதுகாப்பு ஆகியவற்றில் பரிசுகளுடன் மோடி வருகிறார்” என்ற தலைப்புடன் செய்தி வெளியிட்டுள்ளது. அதே செய்தித்தாளில் ஒரு பத்தியாளர், “பிரதமர் மோடி முழு மனதுடன் இந்தியாவுடன் இருக்கிறார்” என்ற தலைப்பில் பயணம் குறித்து எழுதி இருக்கிறது.



















