
சென்னை: ஜூலை 11-
தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் அறிவிப்பை வெளியிடக் கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல்வர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் திருச்சி கிழக்கில் அவர் வெற்றி பெற்றதை எதிர்த்து, அத்தொகுதி திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார்.இதேபோல, கரூரில் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் (அதிமுக) தேர்தல் வெற்றியை எதிர்த்து தவெக வேட்பாளர் வி.பி.மதியழகன், விராலிமலையில் சி.விஜயபாஸ்கரின் (அதிமுக) வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் கே.கே.செல்லப்பாண்டியன், பெருந்துறையில் எஸ்.ஜெயக்குமாரின் (அதிமுக) வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் தோப்பு வெங்கடாச்சலம் ஆகியோர் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
அம்பாசமுத்திரத்தில் இசக்கி சுப்பையா (அதிமுக) வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்கக் கோரி தொகுதி வாக்காளர் காந்திமதிநாதன் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதற்கிடையே, அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், எஸ்.ஜெயக்குமார், இசக்கி சுப்பையா ஆகிய 4 பேரும் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இந்நிலையில், தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள மேற்கண்ட 5 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடத்த தடை விதிக்குமாறும், தேர்தல் அறிவிப்பை வெளியிடக் கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடுமாறும் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பாளையங்கோட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் கே.வெங்கடாஜலபதி பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
‘தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது இடைத் தேர்தல் நடத்தப்பட்டால், வழக்கின் நோக்கம் அர்த்தமற்றதாகிவிடும். வழக்குகளை நிலுவையில் வைத்துக் கொண்டு இடைத் தேர்தலை நடத்தினால், தேவையற்ற சட்ட சிக்கலை ஏற்படுத்திவிடும்’ என்று அவர் தெரிவித்திருந்தார். உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடைபெற்ற வாதம்: மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வி.ஆர்.சண்முகநாதன்: நிலுவை வழக்கு விசாரணைக்குப் பிறகு, தேர்தலில் தோல்வி அடைந்தவரை வெற்றி பெற்றவராக உயர் நீதிமன்றம் ஒருவேளை அறிவிக்கக்கூடும். அதே நேரம், இடைத் தேர்தலில் ஒரு எம்எல்ஏ தேர்ந்தெடுக்கப்பட்டால், ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்கள் என்ற நிலை உருவாகும். எனவே, தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருக்கும்வரை அந்த தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்தக்கூடாது என உச்ச நீதிமன்றம் பல வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளது.


















