Home மாவட்டங்கள் பெங்களூர் பாகேபள்ளியில் பாகிஸ்தானைசேர்ந்த தாய் மகன் கைது

பாகேபள்ளியில் பாகிஸ்தானைசேர்ந்த தாய் மகன் கைது

பெங்களூரு: ஜூலை 11- கர்நாடக மாநிலம் சிக் பல்லாபூர் மாவட்டம், பாகேபள்ளி தாலுகா தாசகாரேபள்ளி கிராமத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது மகனுடன் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன்பேரில் பாகேபள்ளி போலீசார் அதிரடி வேட்டை நடத்தினர். அப்போது, வீசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கியிருந்த பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பர்ஹானாஜ் மற்றும் அவருடைய மகன் முகமது ஃபர்தீன் கான் ஆகிய இருவரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. தாசகாரேபள்ளியைச் சேர்ந்த அயூப் கான் என்பவர், பாகிஸ்தானைச் சேர்ந்த பர்ஹானாஜை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். பர்ஹானாஜும், அவரது மகன் முகமது ஃபர்தீனும் பாகிஸ்தான் குடியுரிமை பெற்றவர்கள் ஆவர்.
இவர்கள் இந்திய குடியுரிமை பெறாத நிலையிலும், இங்கு சட்டவிரோதமாக ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் வங்கி கணக்குகளைப் பெற்று மோசடியாகப் பயன்படுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான ஆவணங்களை போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
பர்ஹானாஜின் கணவர் அயூப் கான் தற்போது கத்தாரில் பஸ் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். பர்ஹானாஜ் தன் பிள்ளைகளுடன் இங்குள்ள கிராமத்தில் வசித்து வந்துள்ளார்.
பர்ஹானாஜ் மற்றும் பிள்ளைகளின் வீசா காலம் எப்போதோ முடிவடைந்த நிலையிலும், அவர்கள் பாகிஸ்தான் திரும்பாமல் இந்தியாவிலேயே தங்கியுள்ளனர். ‘ஆபரேஷன் சிந்துர்’ நடவடிக்கைக்குப் பிறகு இவர்களது வீசா புதுப்பிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து, சட்டவிரோதமாக ஊடுருவி தங்கியிருந்த குற்றச்சாட்டின் கீழ் பாகேபள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தாய் மற்றும் மகனைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.