
பெங்களூரு: ஜூலை 11-
கர்நாடக அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய காங்கிரஸ் கட்சிக்குள் அழுத்தங்கள் அதிகரித்துள்ள நிலையில், முதலமைச்சர் டி.கே. சிவகுமார் நாளை அல்லது நாளை மறுநாள் டெல்லி சென்று, அமைச்சரவை விரிவாக்கத்திற்கான முகூர்த்தத்தை இறுதி செய்யவுள்ளார்.
வெளிநாட்டுப் பயணத்தில் இருக்கும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நாளை காலை நாடு திரும்புகிறார். இதைத் தொடர்ந்து, முதலமைச்சர் சிவகுமார் டெல்லி சென்று, அமைச்சரவை விரிவாக்கம் குறித்து விவாதித்து தேதியை முடிவு செய்வார்.
முதலமைச்சர் சிவகுமாருடன் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, காங்கிரஸ் தலைவர் ஹரிபிரசாத் ஆகியோரும் டெல்லி செல்கின்றனர். அனைவரும் காங்கிரஸ் மேலிடத்துடன் அமர்ந்து அமைச்சர்களின் பட்டியலை இறுதி செய்ய உள்ளனர். ஏற்கனவே அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோருடன் ஒருசுற்று பேச்சுவார்த்தை நடத்தி, இதற்கான மேடை தயார் செய்யப்பட்டுள்ளது. ராகுல் காந்தியிடம் ஒப்புதல் கிடைத்தவுடன் விரிவாக்கம் நடக்கும்.
இந்த மாதம் 15-ஆம் தேதி முதல் ஆடி மாதம் தொடங்குகிறது. அதற்குள் அமைச்சரவையை விரிவாக்க சிவகுமார் விரும்புகிறார். ஒருவேளை அதற்குள் ஒப்புதல் கிடைக்காவிட்டாலும், ஆடி மாதத்தைப் பார்க்காமல் இந்த வார இறுதியிலோ அல்லது அடுத்த வாரத் தொடக்கத்திலோ விரிவாக்கம் நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. காங்கிரஸ் மேலிடம் இவற்றை பெரிதாக நம்பாததால், பச்சைக்கொடி காட்ட வாய்ப்புள்ளது.
கடந்த ஜூன் 3-ஆம் தேதி முதலமைச்சருடன் 13 அமைச்சர்கள் பதவியேற்றனர். இன்னும் 20 இடங்கள் காலியாக உள்ளன. முழு அளவில் விரிவாக்கம் நடக்கும் என்று கூறப்பட்டாலும், ஏதேனும் அதிருப்தி ஏற்பட்டால் சமாதானப்படுத்த 2 இடங்களைக் காலி வைத்துவிட்டு, 18 இடங்களை மட்டும் நிரப்ப சிவகுமார் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்த முறை புதிய முகங்களுக்கு அதிக முன்னுரிமை தர வேண்டும் என்ற குரல் எழுந்துள்ளது. அதே நேரம், 4-5 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்களுக்கும் அமைச்சர் பதவி தர வேண்டும் என்ற அழுத்தமும் உள்ளது. இதனால் பழையவர்களையும், புதியவர்களையும் சமமாகப் பாவித்து பட்டியல் தயாரிப்பு செய்யப்படுகிறது. குறைந்தது 7-8 புதிய முகங்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம். பிராந்தியம் மற்றும் சாதி வாரியாக பட்டியல் இறுதி செய்யப்படும்.
ராகுல் காந்தி திரும்புவதை ஒட்டி, அமைச்சர் பதவியை குறிவைத்துள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் நரேந்திரசுவாமி, சந்தோஷ் லாட், சிவலிங்கேகவுடா, ஜெயச்சந்திரா, அசோக் பட்டண் உள்ளிட்ட 7-8 பேர் ஏற்கனவே டெல்லியில் முகாமிட்டுள்ளனர். இன்றும் நாளையும் மேலும் சிலர் டெல்லி செல்ல வாய்ப்புள்ளது.
தற்போதைய சூழலைப் பார்த்தால் அமைச்சரவை விரிவாக்கம் மிக விரைவில் நடப்பது நிச்சயம் எனத் தெரிகிறது.


















