
புதுடெல்லி: ஜூலை 13-
ஹைட்ரஜன் சக்தியால் இயங்கும் முதல் பயணிகள் ரயில் விரைவில் இந்தியாவில் சோதனை ஓட்டமாக அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த ரயிலை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.இந்திய ரயில்வேயில் ரயில்கள் டீசல் மூலமும், மின்சாரம் மூலம்தான் இயக்கப்பட்டு வருகின்றன. டீசல் ரயில்கள் மூலம் ஏற்படும் காற்று மாசைக் குறைக்கும் நோக்கில் ஹைட்ரஜன் ரயில் அறிமுகப்படுத்தப்படுகிறது. ஹைட்ரஜன் எரிபொருள் செல்கள் மூலம் மின் உற்பத்தி செய்து, அதன்மூலம் ரயில் இன்ஜின் இயங்குகிறது.
மின் கம்பிகள் அமைத்து அதன் மூலம் ரயில்கள் இயக்க கடினமான இருக்கும் வழித்தடங்களில், அதிக செலவு பிடிக்கும் தளங்களில் ஹைட்ரஜன் ரயில்கள் பயனுள்ளதாக இருக்கும். இந்த ரயில்களுக்கு புதிதாக இருப்புப் பாதை தேவையில்லை, ஏற்கெனவே இருக்கும் தளத்தையே பயன்படுத்தலாம்.
எப்போது திட்டம் தொடங்கியது?
கடந்த 2020-21-ம் ஆண்டில் ரூ.136 கோடி மதிப்பீட்டில் வடக்கு மண்டல ரயில்வே இந்தத் திட்டத்தை 2022 ஏப்ரலில் தொடங்கியது. இந்தத் திட்டத்துக்கான டெண்டர் ஹைதராபாத்தைச் சேர்ந்த மேதா என்ற நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது, இந்த நிறுவனம்தான் எரிபொருட்களை சப்ளை செய்கிறது. இந்த ரயிலுக்கான சோதனை ஓட்டம் முடிந்தபின், கடந்த மே 22-ம் தேதி பயணிகளை இயக்க அனுமதியளித்தது.
எவ்வாறு இயங்கும்?
ரயிலில் அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக கலன்களில் அதிக அழுத்தத்தில் ஹைட்ரஜன் எரிபொருள் வைக்கப்பட்டிருக்கும், அதைப் பயன்படுத்தி இயக்கப்படும்.இந்த ரயிலில் உள்ள பிரத்யேக கலன்களில் அதிக அழுத்தத்தில் 460 கிலோ ஹைட்ரஜன் நிரப்பப்படும். தினசரி 2 டிரிப்புகளுக்கு 300 கிலோ வரை செலவாகும்; 365 கிலோ மீட்டர் வரை செல்ல முடியும் என கணக்கிடப்பட்டுள்ளது.
ஹைட்ரஜன் ரயிலில் இரு பைலட் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இந்தப் பெட்டிகளில் ஹைட்ரஜன் எரிபொருள் மற்றும் லித்தியம் பெரோபாஸ் பேட்டரி கொண்ட 4 செட் பவர் பேக் இணைக்கப்பட்டிருக்கும். அதிக அழுத்தத்தில் ஹைடர்ஜன் நிரப்பட்டுள்ளதால், வெளியிலிருந்து வரும் ஆக்சிஜனோடு கலக்கும்போது, வேதி வினையால் மின் உற்பத்தி நடந்து அதன்மூலம் ரயில் இயங்கும்.
ஒரு பவர் பேக் மூலம் 300 கிலோவாட் மின்சாரம் உற்பத்தியாகும், 115 கிலோவாட் எரிபொருள் மூலமும், 185 கிலோவாட் லித்தியம் பேட்டரி மூலம் உற்பத்தியாகும். 4 பவர் பேக் மூலம் 1200 கிலோவாட் மின்சக்தி உற்பத்தியாகும்.













