
புதுடெல்லி: ஜூலை 13-
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 20-ம் தேதி தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவது தொடர்பாக ஆலோசிக்க ஜூலை 19-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் 20-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத் தொடரில் பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் மக்களவையில் மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கான மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மசோதாக்கள் மூலம் மக்கள்தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதிகளை மறுவரையறை செய்ய முடியும். மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு கிடைக்காததால் இந்த மசோதாக்கள் மக்களவையில் தோல்வி அடைந்தன.
இந்நிலையில், மழைக்கால கூட்டத் தொடரில் மகளிர் இடஒதுக்கீட்டுக்கான மசோதாக்களை மக்களவையில் மீண்டும் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. கடந்த சில மாதங்களில் திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிவசேனா (உத்தவ் அணி) கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள், பாஜகவுக்கு அணி மாறி உள்ளனர். இதனால் மக்களவை, மாநிலங்களவையில் பாஜகவுக்குக் கூடுதல் பலம் கிடைத்திருக்கிறது. இதர கட்சிகளின் ஆதரவோடு மகளிர் இடஒதுக்கீட்டுக்கான மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு வியூகம் வகுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.ஆனால், எதிர்க்கட்சி எம்.பி.க்கள், எம்எல்ஏக்களை குதிரை பேரம் மூலம் பாஜக இழுப்பதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டி வருகின்றன. இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரச்சினை எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. மருத்துவ இளநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வு வினாத்தாள் கசிவைக் கண்டித்து நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தின. இந்த விவகாரத்துக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.பிரதமர், முதல்வர்கள், அமைச்சர்கள் குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு 30 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்தால் அவர்களைப் பதவி நீக்க வகை செய்யும் மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
இந்த மசோதா குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வு செய்தது. “குற்ற வழக்குகளில் பிரதமர், முதல்வர்கள், அமைச்சர்கள் சிக்கி 30 நாட்கள் சிறையில் இருந்தால் அவர்களை நிரந்தரமாக பதவி நீக்கம் செய்யக்கூடாது. தற்காலிகமாக பதவி நீக்கலாம்” என்று நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிந்துரை செய்துள்ளது.













