
ஸ்ரீநகர்: ஜூலை 13-
ஜம்மு- காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது.
முதலமைச்சராக உமர் அப்துல்லா பதவியேற்றது முதலே, அம்மாநிலத்திற்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்குவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் மத்திய அரசுக்கும் ஜம்மு- காஷ்மீர் அரசுக்கும் இடையே மோதல்கள் தொடர்ந்து நீடித்து வருகின்றன.
இந்நிலையில், ஸ்ரீநகரின் ஹசரத்பால் பகுதியில் நேற்று முன்தினம் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்வர் உமர் அப்துல்லா பேசுகையில், ”ஜம்மு பகுதியைச் சேர்ந்த எங்களது கட்சி எம்எல்ஏவை சந்தித்த பா.ஜ.க. பொறுப்பாளரும், உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான ஒருவர், கட்சி மாறினால் ரூ.20 கோடி முதல் ரூ.30 கோடி வரை பணம், அமைச்சர் பதவி மற்றும் ஜம்மு- காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து பெற்றுத் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
மக்களின் நம்பிக்கையை மிக மலிவானதாக அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ரூ.100 கோடி கொடுத்தாலும் எங்கள் கட்சி எம்எல்ஏ-க்கள் தங்களை விற்க மாட்டார்கள்” என்று கூறியிருந்தார்.
இது குறித்து பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சுதான்ஷு திரிவேதி கூறும்போது, “ஜம்மு- காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா மிகவும் பொறுப்பற்ற, கண்டனத்திற்குரிய குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளார். இதற்கு அவர் உடனடியாக ஆதாரம் தர வேண்டும்; இல்லையெனில் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றார்.


















