Home செய்திகள் உலக செய்திகள் கிழிந்த ஷூ, ஷாக்ஸ் உடன் விளையாடும் வீரர்கள் – கால்பந்து தொடரில் வினோதம்

கிழிந்த ஷூ, ஷாக்ஸ் உடன் விளையாடும் வீரர்கள் – கால்பந்து தொடரில் வினோதம்

நியூயார்க்: ஜூலை 13-
உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளில் விளையாடும் வீரர்கள் தங்கள் சாக்ஸ் மற்றும் காலணிகளில் ஓட்டை போட்டு வினோதமாக விளையாடி வருகின்றனர்.
கோடிக்கணக்கில் ஊதியத் வாங்கும் கால்பந்து வீரர்கள் ஏன் கிழிந்த சாக்ஸ் மற்றும் ஷூக்களுடன் விளையாடுகின்றனர் என்பதற்கு பின்னால் விசித்திரமான ஒரு காரணம் இருக்கிறது. விளையாட்டுப் போட்டிகளின் போது வீரர்களின் கணுக்கால், பாதம் மற்றும் கெண்டைக்கால் தசைகளுக்கு ஆதரவாகவும், ஷின் கார்டுகளை சரியான இடத்தில் வைத்திருக்கவும் சாக்ஸ்கள் மிகவும் இறுக்கமாக வடிவமைக்கப்படுகின்றன. ஆனால், இந்த கூடுதல் இறுக்கம் சில வீரர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது.
போட்டியின் போது கால்களில் ஒருவித மரத்துப்போன உணர்வும், தசைப்பிடிப்பும் ஏற்படுவதாக வீரர்கள் கூறுகின்றனர். இந்த அழுத்தத்தைக் குறைத்து தங்களுக்குத் தளர்வை ஏற்படுத்திக் கொள்வதற்காகவே பிரிட்டனின் ஜூட் பெல்லிங்ஹாம் , புகாயோ சாகா மற்றும் கைல் வாக்கர் போன்ற முன்னணி வீரர்கள் தங்கள் சாக்ஸ்களின் பின்புறத்தில் ஓட்டை போடுகின்றனர். இருப்பினும், இந்த மாற்றங்கள் விரும்பிய பலனைத் தரும் என்பதற்கான அறிவியல் சான்றுகள் மிகவும் குறைவு என்று நிபுணர்கள் கூறுகின்றனர். 3CB பெர்ஃபார்மன்ஸ் அமைப்பைச் சேர்ந்த டாக்டர் ராஜ் ப்ரார் இதுகுறித்து பேசியதில், “போட்டிகளுக்குப் பிறகு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், கால்களில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும் இறுக்கமான கம்ப்ரஷன் சாக்ஸ்களைப் (Compression socks) பயன்படுத்துவதே மருத்துவ ரீதியாகச் சரியானது” என்கிறார். முன்னாள் மான்செஸ்டர் யுனைடெட் வீரர் கேரி நெவில் இந்த போக்கை விமர்சித்துள்ளார். “நிறுவனங்கள் ஏன் அவர்களுக்குப் பொருத்தமான அளவுகளில் சாக்ஸ்களை தயாரித்து வழங்குவதில்லை?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். சாக்ஸ்களைத் தவிர, சில வீரர்கள் தங்கள் கால்பந்து காலணிகளின் குதிகால் பகுதியிலும் துளைகளை இடுகிறார்கள்.
புதிய காலணியை அணிந்து கொண்டு நீண்ட தூரம் ஓடும்போது, அது குதிகாலில் உராய்வை ஏற்படுத்தி கொப்புளங்களை உண்டாக்கலாம். இதிலிருந்து தப்பிக்கவும், குதிகால் பகுதியில் உள்ள அக்கில்லெஸ் தசைநார் மீதான அழுத்தத்தைக் குறைக்கவும் வீரர்கள் காலணிகளின் பின் பகுதியை வெட்டுகின்றனர். குதிகால் பகுதியில் ஏற்படும் இந்த அசௌகரியத்திற்கு ‘ஹாக்லண்ட்ஸ் சிண்ட்ரோம்’ அல்லது ‘பம்ப் பம்ப்’ என்று அழைக்கப்படும் ஒரு எலும்பு வளைவுப் பிரச்சனையும் முக்கியக் காரணமாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் விளக்குகின்றனர்.