
டெல்லி, ஜூலை 13- திருச்சி கிழக்கு, விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம், கரூர் ஆகிய 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தனது தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என மனுதாரர் வெங்கடாஜலபதி உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்ற முதல்வர் விஜய், பின்னர் திருச்சி கிழக்கு தொகுதி எல்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். அதேபோல், மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ மரகதம் குமரவேல், தாராபுரம் தொகுதி எம்.எல்.ஏ சத்தியபாமா, பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ ஜெயக்குமார் மற்றும் அம்பாசமுத்திரம் தொகுதி எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா ஆகியோரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். மேலும், விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ சி. விஜயபாஸ்கர், கரூர் தொகுதி எம்.எல்.ஏ எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோரும் தங்கள் எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ளனர். இந்நிலையில், இவர்களின் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அந்த வழக்குகள் முடிவடையும் வரை இடைத்தேர்தலை அறிவிக்கக் கூடாது எனக் கோரி, திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த வெங்கடாஜலபதி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.



















