
பெலகாவி: ஜூலை 13-
கணவர் வீட்டின் கொடுமை தாங்காமல், 3 வயது சிசுவுடன் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நெஞ்சை உலுக்கும் கொடூர சம்பவம் பெலகாவி பீரனவாடியில் நடந்துள்ளது.
பீரனவாடி பாட்டீல் கல்லி பகுதியைச் சேர்ந்தவர் பிரேமா நாகேஷ் தளவார் (28). இவருக்கும் நாகேஷ் என்பவருக்கும் திருமணமாகி புவன் (3) என்ற மகன் இருந்தான். இந்நிலையில், கணவர் குடும்பத்தினர் வாங்கிய கடனை அடைக்குமாறு பிரேமாவிற்கு தொடர்ந்து கடுமையான உடல் மற்றும் மன ரீதியான சித்திரவதை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.
தினமும் நரக வேதனையை அனுபவித்து வந்த பிரேமா, இனி வாழ வழியில்லை என்ற விரக்தியில் தனது 3 வயது மகன் புவனுடன் சேர்ந்து சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்து வந்த பிரேமாவின் குடும்பத்தினர் கொதித்தெழுந்து கிராமப்புற காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், கணவர் நாகேஷ் தளவார், மாமியார் சுசீலா, மைத்துனர் பரசுராம், நாத்தனார் சங்கீதா உள்பட 6 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


















