
திருப்பதி, ஜூலை 17- திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நன்கொடையாளர்களுக்கான சலுகைகள் குறைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானதை அடுத்து, ஒரே நாளில் 2,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் போட்டிப்போட்டு 96.98 கோடி ரூபாயை காணிக்கையாக வழங்கினர். ஆந்திராவின் திருப்பதி திருமலையில் உள்ள புகழ்பெற்ற ஏழுமலையான் கோவிலில் உலகம் முழுதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் தரிசனம் செய்து வருகின்றனர்.திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிர்வகித்து வரும் இந்த கோவிலுக்கான நன்கொடையாளர்களின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. கோவில் தரவுகளின்படி, 1.97 லட்சம் பேர் பதிவு செய்யப்பட்ட நன்கொடையாளர்களாக உள்ளனர். இவர்களில், 1.5 லட்சம் பேர் 1 லட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேல் அளித்துள்ளனர்; 22,000 பேர் 10 லட்சத்துக்கும் அதிகமாக நன்கொடை அளித்துள்ளனர். கடந்த நான்கு மாதங்களில் மட்டும் 10 லட்சம் ரூபாய் நன்கொடை அளித்தவர்களின் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரித்துள்ளது. நன்கொடையாளர்களுக்கு வாழ்நாள் முழுதும் தரிசனத்தில் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுவதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. சிறப்பு நுழைவு தரிசனம், கருவறைக்கு அருகில் உள்ள சுபதம் பகுதி வழியாக அனுமதி, ‘பிரேக் அப்’ தரிசனம், விடியற்காலை வழிபாட்டில் பங்கேற்கும் சுப்ரபாத சேவை, கல்யாண உற்சவம் ஆகியவற்றில் பங்கேற்பது, தங்கும் வசதிகள் மற்றும் லட்டு, பட்டு வஸ்திரங்கள், தங்கம் மற்றும் வெள்ளி நாணய பரிசுகள் ஆகியவை இந்த சலுகைகளில் அடங்கும்.
















