
ஹாசன்: ஜூலை 20-
முன்னாள் பிரதமர் ஹெச்.டி.தேவேகவுடாவின் தர்மபத்தினி சென்னம்மாவின் இறுதிச்சடங்கு, அனைத்து அரசு மரியாதைகளுடன் இன்று மாலை மாவினகெரே மலை அடிவாரத்தில் உள்ள ரங்கநாதசுவாமி கோவில் பகுதியில் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகள் ரங்கநாதசுவாமி மலை அடிவாரத்தில் உள்ள நிலத்தில் முழுவீச்சில் செய்யப்பட்டுள்ளன. பெங்களூரைச் சேர்ந்த வாஸ்து நிபுணர் ஹரிபிரசாத் அறிவுறுத்திய வாஸ்துபடி இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இன்று மதியம் 2 மணிக்கு மேல், பெங்களூரு ஜே.பி.நகர் கனககிரி ஸ்ரீ லட்சுமி நாராயணசுவாமி கோவில் தலைமை அர்ச்சகர் கண்ணன் சுவாமி தலைமையில் வைதீக சடங்குகள் தொடங்குகின்றன. அதனைத் தொடர்ந்து இறுதிச்சடங்கு நடைபெற முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இறுதிச்சடங்கு நடக்கும் ரங்கநாதசுவாமி மலை அடிவாரத்தில் பிரம்மாண்ட ஜெர்மன் தொழில்நுட்ப பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அமர 4,000 நாற்காலிகள் மைசூரிலிருந்து வரவழைக்கப்பட்டு போடப்பட்டுள்ளன. தற்காலிக மின்விளக்கு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
வொக்கலிகா சமுதாய பாரம்பரிய முறைப்படி இந்த இறுதிச்சடங்கு நடைபெறுகிறது. இதில் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், மத்திய அமைச்சர்கள் பிரஹலாத் ஜோஷி, வி.சோமண்ணா, சிவராஜ் சிங் சவுகான், மனோகர் லால் கட்டார் மற்றும் பல்வேறு பகுதி மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.













