Home விளையாட்டு காமன்வெல்த் விளையாட்டு: பதக்கங்களை வென்று குவிக்குமா இந்திய படை?

காமன்வெல்த் விளையாட்டு: பதக்கங்களை வென்று குவிக்குமா இந்திய படை?

கிளாஸ்கோ, ஜூலை 23- 23-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் இன்று (23-ம் தேதி) தொடங்குகிறது. வரும் ஆகஸ்ட் 2-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் 74 நாடுகளை சேர்ந்த 3 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். போட்டி செலவுகளை குறைக்கும் வகையில் இம்முறை 19 விளையாட்டுகளில் இருந்து 10 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் கிளாஸ்கோ நகரின் 4 இடங்களில் மட்டுமே போட்டிகள் நடத்தப்பட உள்ளன. பாரா விளையாட்டு போட்டியும் இந்தத் தொடருடன் இணைத்து நடத்தப்பட உள்ளது. முதலில் காமன்வெல்த் போட்டியை நடத்த ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணம் தேர்வு செய்யப்பட்டிருந்தது. ஆனால், கடந்த 2023-ம் ஆண்டு அந்த மாகாணம் செலவினங்களை காரணம் காட்டி போட்டியை நடத்துவதில் இருந்து பின்வாங்கியது. இதன் பின்னரே ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரம் போட்டியை நடத்த முன்வந்தது. இம்முறை தடகளம், நீச்சல், ஆர்ட்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ், டிராக் சைக்கிளிங், நெட்பால், பளுதூக்குதல், குத்துச்சண்டை, ஜூடோ, லான் பவுல், 3×3 கூடைப்பந்து ஆகிய 10 விளையாட்டுகளில் 215 நிகழ்வுகள் நடைபெற உள்ளன. காமன்வெல்த் விளையாட்டு ஸ்காட்லாந்தில் நடைபெறுவது இது 4-வது முறையாகும். இதற்கு முன்னர் 1970, 1986, 2014-ம் ஆண்டுகளில் காமன்வெல்த் விளையாட்டை ஸ்காட்லாந்து நடத்தியிருந்தது.
126 வீரர், வீராங்கனைகள்தொ டக்க நாளான இன்று ஓவோ ஹைட்ரோ மைதானத்தில் தொடக்க விழா நடைபெறுகிறது. ஒட்டுமொத்தமாக இந்த போட்டிக்காக சுமார் 160 மில்லியன் பவுண்டுகளை கிளாஸ்கோ செலவு செய்கிறது. இது பர்மிங்காமில் கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற தொடரின் செலவை விட ஏறத்தாழ 60 சதவீதம் குறைவு ஆகும்.
கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டில் இந்தியாவில் இருந்து 126 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். இன்று நடைபெறும் தொடக்க விழாவில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மீராபாய் சானு, லவ்லினா போர்கோஹெய்ன் ஆகியோர் இந்திய தேசியக் கொடியையும், போட்டிக்கான ஜோதியையும் ஏந்திச் செல்கின்றனர்.