
சென்னை, ஜூலை 22- குவான்ட் பாக்ஸ் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியின் 4-வது பதிப்பு வேளச்சேரியில் நடைபெற்று வருகிறது. இதன் 6-வது சுற்று நேற்று நடைபெற்றது. இதில் அமெரிக்க கிராண்ட் மாஸ்டரான ஹான்ஸ் நீமன், ரஷ்ய கிராண்ட் மாஸ்டரான டிமிட்ரி ஆண்ட்ரெய்கினுடன் மோதினார். இந்த ஆட்டம் 39-வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. உஸ்பெகிஸ்தான் கிராண்ட் மாஸ்டரான நோதிர்பெக் அப்துசத்தோரோவ், பிரான்ஸ் கிராண்ட் மாஸ்டரான அலிரேசா ஃபிரோஜாவுடன் பலப்பரீட்சை நடத்தினார். இந்த ஆட்டம் 41-வது நகர்த்தலின் போது டிரா ஆனது. உலக சாம்பியனான இந்தியாவின் டி.குகேஷ், சகநாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டரான எம்.பிரனேஷை எதிர்கொண்டார். இதில் பிரனேஷ் வெள்ளை காய்களுடனும், குகேஷ் கருப்பு காய்களுடனும் களமிறங்கினார்கள். இந்த மோதலில் 39-வது நகர்த்தலின் போது குகேஷை, பிரனேஷ் தோற்கடித்து அதிர்ச்சி கொடுத்தார். நடப்பு தொடரில் குகேஷுக்கு இது 3-வது தோல்வியாக அமைந்தது. அவர், 2-வது சுற்றில் பிரான்ஸின் அலிரேசா ஃபிரோஜாவிடம், 5-வது சுற்றில் அர்ஜூன் எரிகைசியிடமும் தோல்வி கண்டிருந்தார்.
















