
புதுடெல்லி, ஜூலை 31- ஜூலை 20-ல் மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவே உத்தரவிட்டிருக்க வேண்டும் என்றும், அதற்குப் பொறுப்பேற்று அவர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே வலியுறுத்தியுள்ளார். நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் ஒரு மாதத்துக்கும் மேலாக நடத்தப்பட்ட தொடர் போராட்டம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, தனது சொந்த ஊரான சத்ரபதி சம்பாஜிநகருக்குத் அபிஜித் தீப்கே திரும்பியுள்ளார்.இந்த நிலையில், அவர் இன்று செய்தியாளர்களிடம் பேசியது: “நீதித்துறை மீது கூட இன்றைக்கு கேள்விகள் எழுப்பப்படுகின்றன. ஆனால், அரசை நோக்கி அதை செய்ய முடிவதில்லை. நாட்டில் தற்போது ஜனநாயகம் பெரும் ஆபத்தில் உள்ளது. சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் போன்ற மாநில அரசியல் கட்சிகளை உடைப்பதற்கு அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ ஆகிய மத்திய புலனாய்வு அமைப்புகள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டன என்பதை நாம் அனைவரும் பார்த்தோம். நாட்டின் முக்கிய அரசு நிறுவனங்கள் ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்குப் பதிலாக, ஒரு தனிநபரின் சர்வாதிகாரம் உருவாவதற்கு அனுமதித்து விட்டன. ஜனநாயகத்தைப் பாதுகாப்பது என்பது எதிர்க்கட்சிகளின் பிரச்சினை மட்டுமல்ல; நாட்டின் அனைத்துப் பொதுமக்களும் ஒன்றிணைந்து போராட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திய ஜென் ஸீ தலைமுறையினர் இந்தியப் பண்பாட்டை சீரழித்துவிட்டதாக யோகா குரு பாபா ராம்தேவ் குற்றம்சாட்டியுள்ளார். காந்திஜி மற்றும் அம்பேத்கர் புகைப்படங்களை ஏந்தி சட்டப்பூர்வமாகப் போராடுவது பண்பாட்டைச் சீரழிப்பது என்றால், அதைத் தான் நாங்கள் செய்திருக்கிறோம். நாட்டின் பண்பாட்டையும் எதிர்காலத்தையும் வழிநடத்தும் திறன் இன்றைய இளம் தலைமுறைக்கு முழுமையாக உள்ளது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எழுப்பியுள்ள அமித் ஷாவின் ராஜினாமா கோரிக்கையை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். மாணவர்கள் மீது வன்முறையைப் பிரயோகிக்க அமித் ஷாவைத் தவிர வேறு யாரும் உத்தரவிட்டிருக்க முடியாது. எனவே அவர் உடனடியாக பதவி விலக வேண்டும்” என்று அபிஜித் தீப்கே தெரிவித்தார்.













