
பெங்களூரு, ஜூலை.31-
காவேரி நீர் பங்கீடு தொடர்பாக கர்நாடகாவில் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழக வெற்றித் கழகத் தலைவரும் தமிழக முதலமைச்சருமான விஜய் தனது பெங்களூர் பயணத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று கர்நாடக முதலமைச்சர் டி கே சிவகுமார் அவருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆகஸ்ட் 3-ஆம் தேதி முதல்வர் விஜய் பெங்களூருக்கு வருகை தர இருந்தார். இந்த நிலையில் இந்த பயணத்தை தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காவேரி நீர் ஒழுங்குமுறைக் குழுவின் உத்தரவுப்படி, தமிழகத்திற்கு நாள்தோறும் 3,500 கனஅடி நீர் திறந்து விட வேண்டும் என்ற உத்தரவை காவேரி மேலாண்மை ஆணையம் உறுதி செய்தது. இதைத் தொடர்ந்து கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக மண்டியா மாவட்டத்தில் கன்னட அமைப்புகள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. மண்டியாவில் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்பட சுவரொட்டிகள் கிழிக்கப்பட்டு, திரையிடலும் நிறுத்தப்பட்டது.
இந்த பதற்றமான சூழலில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் டி.கே. சிவகுமார்:
ஆகஸ்ட் 3-ஆம் தேதி திட்டமிடப்பட்ட விஜய்யின் பெங்களூரு வருகையை ஒத்திவைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். தற்போது கர்நாடகாவில். அமைதியான மற்றும் சுமூகமான சூழல் திரும்பிய பிறகு நாங்கள் அவரை வரவேற்பதில் மகிழ்ச்சியடைவோம்,” என்று தெரிவித்தார்.
மேலும், கர்நாடகா அமைதியை விரும்பும் மாநிலம் என்றும், தமிழகத்தைச் சேர்ந்த பலர் கர்நாடகாவிலும், கன்னடர்கள் பலரும் தமிழ்நாட்டிலும் பணியாற்றி வருவதால், உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்காமல் இரு மாநில மக்களின் நலனையும் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பேட்டியின் போது காவேரி குறுக்கே மேக்கேதாட்டுவில் 66 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட சமநிலை நீர்த்தேக்கம் கட்டுவது குறித்து பேசிய சிவகுமார்:
மேக்கேதாட்டு திட்டம் கர்நாடகாவை விட தமிழகத்திற்கே அதிக நன்மையளிக்கும்.
இத்திட்டத்தின் மூலம் கர்நாடகா பெறக்கூடிய ஒரே நேரடிப் பயன் 400 மெகாவாட் நீர்மின் உற்பத்தி மட்டுமே ஆகும்.
புதிய பாசனத்திற்கு வாய்ப்பில்லை: இந்த நீர்த்தேக்கத்தின் நீரைக் கொண்டு கர்நாடகாவில் புதிதாக எந்த ஒரு பாசனத் திட்டத்தையும் தொடங்க முடியாது; இது ஒரு சமநிலை நீர்த்தேக்கமாக மட்டுமே செயல்படும்.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்கு 177.25 டி.எம்.சி தண்ணீரை கர்நாடகா வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்த அவர், அதே நேரத்தில் தன் எல்லைக்குள் நீர்த்தேக்கம் கட்ட கர்நாடகாவுக்கு உள்ள உரிமையையும் உச்சநீதிமன்றம் அங்கீகரித்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.
மேக்கேதாட்டு திட்டம் நிராகரிக்கப்பட்டு விட்டதாக வெளியாகும் செய்திகளை மறுத்த சிவகுமார், அதிகார அமைப்புகள் கேட்ட விளக்கங்களுக்கு சட்டரீதியாக பதிலளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.
காவேரி நீர் விவகாரம் குறித்து ஆலோசிக்க ஞாயிற்றுக்கிழமை கர்நாடகாவில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது. மாநிலத்தின் சூழல் இயல்பு நிலைக்குத் திரும்பியவுடன், பேச்சுவார்த்தைக்காக தமிழகத் தலைவருக்கு மீண்டும் அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.













