
டாக்கா, ஆக. 6- டில்லியில் நடந்த வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் பொதுநிகழ்ச்சியில், ஷாகிப் அல் ஹசன் கலந்து கொண்டதால், வங்கதேசத்தில் உள்ள அவரது வீட்டின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுவீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். வங்கதேசத்தில் 2024ம் ஆண்டு மாணவர்கள் போராட்டத்தால் ஆட்சியை இழந்த அவாமி லீக் கட்சி தலைவர் ஷேக் ஹசீனா, இந்தியாவில் அடைக்கலம் புகுந்தார். சுமார் 2 ஆண்டுகளாக தங்கியிருக்கும் அவர் பொதுவெளியில் தோன்றவில்லை. இந்த சூழலில், நேற்று வெளிநாட்டு செய்தியாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில், ‘வீடியோ கான்பரன்ஸ்’ மூலம் உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் வாஜேத், வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், அவாமி லீக் கட்சியின் முன்னாள் எம்பியுமான ஷாகிப் அல் ஹசன் உள்பட அவரது ஆதரவாளர்கள் சிலர் கலந்து கொண்டனர். அப்போது, சிறையில் அடைக்கப்படலாம் என்ற அச்சுறுத்தல் இருந்தாலும் வங்கதேசம் செல்வது உறுதி என ஷேக் ஹசீனா கூறினார். இதனிடையே, இந்த நிகழ்ச்சிக்கும், மத்திய அரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என மத்திய வெளியுறவு அமைச்சகம் விளக்கம் அளித்து விட்டது.இந்த சூழலில், ஷேக் ஹசீனாவின் இந்தப் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்த வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சகம், ‘வரலாற்றை திசைதிருப்ப ஷேக் ஹசீனாவின் முயற்சிகளை மக்கள் ஏற்கனவே நிராகரித்து விட்டனர். குற்றவாளியான ஹசீனாவுக்கும், அவரது மாபியா கும்பலுக்கும் வங்கதேச அரசியலில் இனி ஒருபோதும் இடம் இருக்காது,’ என்று அறிக்கை விட்டுள்ளது. இந்த நிலையில், டில்லியில் ஷேக் ஹசீனா பங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், அவாமி லீக் கட்சியின் முன்னாள் எம்பியுமான ஷாகிப் அல் ஹசனின், மகுரா பகுதியில் உள்ள வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு அவாமி லீக் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.














