
புதுடெல்லி, ஆக. 6- ‘மாணவர்கள் நடத்தும் போராட்டத்தின்போது, போலீசாரும், அதிவிரைவு படையினரும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். ஆக்ரோஷத்துடன் அவர்களை கையாள கூடாது’ என, உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. டில்லியில் நடந்த மாணவர்கள் போராட்டத்தின் போது வன்முறை வெடித்ததற்கு கரப்பான்பூச்சி ஜனதா கட்சியே காரணம் என்பதால், அக்கட்சி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் டில்லி மற்றும் பிற மாநிலங்களில் நடந்த மாணவர்கள் போராட்டத்தின் போது வெடித்த வன்முறை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுடன் சேர்த்து, கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு எதிரான மனுவையும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது. ஜனநாயக நாட்டில் அமைதியாக போராட உரிமை இருக்கிறது. அதே நேரம், அந்த போராட்டத்தை ஒடுக்கும் விவகாரத்தில் போலீசாரும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். மாணவர்கள் ஆக்ரோஷமாகி, வன்முறைக்கு திரும்பாத வகையில், உயரதிகாரிகள் மிகுந்த கவனத்துடன் இத்தகைய போராட்டங்களை கையாள வேண்டும். போலீசாரும் பதிலுக்கு ஆக்ரோஷமாக எதிர்வினையாற்றினால், நிலைமை மேலும் மோசமாகும். மாணவர்கள் ஏன் போராடுகின்றனர்? அவர்கள் என்ன சொல்ல வருகின்றனர்? கோரிக்கை என்ன? ஆகியவற்றை செவி கொடுத்து கேட்பது தான் பிரச்னையை பூதாகரமாக்காமல் தடுக்க உதவும்.















