
புதுடெல்லி, ஆகஸ்ட் 7 –
நீட் யுஜி தேர்வு தொடங்குவதற்கு 3 நாட்களுக்கு முன்பே வினாத்தாள் கசிந்தது என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் இந்தத் தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. வாட்ஸ்அப், டெலிகிராம் மற்றும் நேரடி சிறப்பு வகுப்புகள் மூலம் மாணவர்களுக்கு வினாத்தாள்கள் வழங்கப்பட்டதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.
தேசிய தேர்வு முகமையுடன் தொடர்புடைய பாட நிபுணர்கள், பயிற்சி மையங்களின் நிர்வாகிகள், இடைத்தரகர்கள் மற்றும் பிறர் இந்த வழக்கில் ஈடுபட்டுள்ளதாக சிபிஐ தனது குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளது.
வேதியியல் பாட நிபுணர் பி.வி. குல்கர்னி, ஏப்ரல் 25 முதல் 27 வரை புனேவில் நீட் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளை நடத்தினார். அப்போது, நீட் தேர்வில் இடம்பெற்ற அதே கேள்விகளையும் பதில்களையும் அவர் மாணவர்களுக்குக் கற்பித்துள்ளார்.
லாத்தூரிலும் இதேபோன்ற சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டதாக சிபிஐ நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. மாணவர்களின் நோட்டுப் புத்தகங்களில் எழுதப்பட்டிருந்த கேள்விகள், கசிந்த வினாத்தாளுடன் ஒத்துப்போவதாக விசாரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குல்கர்னியின் கைபேசியிலிருந்து, வேதியியல் வினாக்களின் புகைப்படங்கள், தேர்வர்கள் மற்றும் அவர்களது பெற்றோருடனான உரையாடல்கள் உள்ளிட்ட பல முக்கிய டிஜிட்டல் ஆதாரங்கள் மீட்கப்பட்டன.
தேர்வுக்குப் பிறகு, ஒரு பெற்றோர் குல்கர்னியைத் தொடர்புகொண்டு, அவர் குறிப்பிட்டிருந்த கேள்விகள் தேர்வில் வந்திருந்ததால், அவருக்கு ஒரு கைக்கடிகாரத்தைப் பரிசளிக்க விரும்புவதாகக் கூறினார். மேலும், குல்கர்னி இயற்பியல் வினாத்தாளைப் பெறவும் முயன்றதாக சிபிஐக்குத் தகவல் கிடைத்தது என்ற தகவல்கள் குற்றப் பத்திரிக்கையில் இடம்பெற்றுள்ளது.














