
பெங்களூரு: ஆக. 8-
கர்நாடக மாநிலத்தில் அமைச்சர் பதவி கிடைக்காததால் அதிருப்தியில் உள்ள மூத்த எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்த அமைச்சரவையை மீண்டும் மாற்றியமைக்க காங்கிரஸ் கட்சி பரிசீலித்து வருகிறது. இது தொடர்பாக டெல்லி சென்று மேலிட தலைவர்களுடன் ஆலோசித்து, விரைவில் மீண்டும் அமைச்சரவை விரிவாக்கம் செய்ய முதலமைச்சர் டி.கே.சிவகுமார் முடிவு செய்துள்ளார்.
துறை ஒதுக்கீட்டில் இழுபறி
அமைச்சர் பதவி கிடைக்காத மூத்த எம்.எல்.ஏ.க்கள் தங்கள் அதிருப்தியைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால், புதிதாகப் பதவியேற்ற அமைச்சர்களுக்கு இன்னும் இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்படாமல் இழுபறி நீடிக்கிறது.
இப்பிரச்சனைக்குத் தீர்வு காண தற்போதைய அமைச்சரவையில் இருந்து 3 அல்லது 4 பேரைக் கழற்றிவிட்டு, அதிருப்தியில் உள்ள மூத்த எம்.எல்.ஏ.க்களுக்கு வாய்ப்பு அளிக்க காங்கிரஸ் கட்சித் தலைமை திட்டமிட்டுள்ளது.
இது குறித்து டி.கே.சிவகுமார், முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவை நேரில் சந்தித்துப் பேசி ஆலோசித்தார்.
இதனிடையே, மூத்த தலைவர்களுக்காகத் தனது அமைச்சர் பதவியை விட்டுத்தரத் தயார் என்று புதிய அமைச்சர் எச்.சி.பாலகிருஷ்ணாவும், கட்சி உத்தரவிட்டால் ராஜினாமா செய்யத் தயார் என உள்துறை அமைச்சர் பிரியங்க் கார்கேயும் அறிவித்துள்ளனர்.
அதேவேளையில், பதவி கிடைக்காத எச்.சி.மகதேவப்பா உள்ளிட்ட மூத்த எம்.எல்.ஏ.க்கள் டெல்லிக்குச் சென்று கட்சி மேலிடத்திடம் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து முறையிடத் தொடங்கியுள்ளனர். இதனால் சட்டமன்றக் கூட்டத்தொடருக்கு முன்பாகவே அமைச்சரவை மாற்றம் நிகழ வாய்ப்புள்ளது.
அமைச்சரவை விரிவாக்கத்தில் கட்சிக்கு உண்மையமையாக உழைத்த மூத்த தலைவர்கள் புறக்கணிக்கப்பட்டு, ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருப்பதாகக் கூறி, அகில இந்திய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு உண்மையுள்ள தொண்டர்கள் பெயரில் பரபரப்பு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
அதில், “கட்சிக்குத் துரோகம் செய்தவர்களையும் ஊழல்வாதிகளையும் அமைச்சர் பதவியில் இருந்து உடனடியாக நீக்கிவிட்டு, கட்சிக்கு விசுவாசமாக இருக்கும் மூத்த தலைவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளனர். கர்நாடக மாநிலத்தில் அமைச்சர் பதவி கிடைக்காது காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் தொடர்ந்து போர்க்கொடி தூக்கி வருகின்றனர். ராஜினாமா செய்வதால் அவர்களை கட்சியை விட்டு விலகுவதா? வேறு கட்சியில் சேர்வதா என்று இவர்கள் ஆலோசனை நடத்தி வருவதாக தெரிகிறது இந்த நிலையில் கட்சியில் ஏற்பட்டுள்ள இந்த குழப்பத்தை சரி செய்யும் வகையில் மீண்டும் மந்திரி சபையை விஸ்தரிக்க முதலமைச்சர் முடிவு செய்துள்ளார். மீண்டும் மந்திரி சபை விஸ்தரிப்பு மற்றும் மத்திய சபை மாற்றம் செய்யப்பட்டாலும் எம்எல்ஏக்கள் திருப்தி அடைவார்களா அல்லது இந்த பிரச்சனை தொடருமா என்பது காங்கிரஸ் கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது













