
பெங்களூரு, ஆக. 9- ‘’2028ம் ஆண்டிற்குள் இந்தியாவில் ஹெலிகாப்டர் போல செங்குத்தாக மேல் எழும்பி மற்றும் இறங்கக்கூடிய, பேட்டரி மூலம் இயங்கும் மின்சார வான்வழி டாக்சிகள் செயல்பாட்டிற்கு வரும் ‘’ என மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்தார். பெங்களூருவில் உள்ள சர்லா ஏவியேஷனின் புதிய தலைமையகத் திறப்பு விழாவில் ராம் மோகன் நாயுடு பேசியதாவது: மின்சார வான்வழி டாக்ஸி சோதனையை இந்தியா வேகமாக மேற்கொண்டு வருகிறது. 2028ம் ஆண்டிற்குள் இந்தியாவில் ஹெலிகாப்டர் போல செங்குத்தாக மேல் எழும்பி மற்றும் இறங்கக்கூடிய, பேட்டரி மூலம் இயங்கும் மின்சார வான்வழி டாக்சிகள் செயல்பாட்டிற்கு வரும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வளர்ந்து வரும் இந்தத் தொழில்நுட்பத்தின் சோதனைகள் அடுத்த ஆண்டு வேகம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெங்களூரு, மும்பை மற்றும் டில்லி போன்ற நெரிசல் மிகுந்த பெருநகரங்களுக்கு மின்சார செங்குத்து புறப்பாடு மற்றும் தரையிறக்கம் கொண்ட விமானங்கள் ஒரு புதிய போக்குவரத்துக்கு வழிவகுக்கும். 2028ம் ஆண்டுக்குள் மின்சார வான்வழி டாக்சிகள் இந்தியாவில் இயங்குவதை நாங்கள் காண விரும்புகிறோம்.பெங்களூருவில் மட்டுமல்ல, மும்பை மற்றும் டில்லியிலும் இதற்கான தேவை மிக அதிகமாக உள்ளது. மின்சார வான்வழி டாக்சி சோதனைகளை சர்லா ஏவியேஷன் நிறுவனம் அடுத்த ஆண்டு துவங்கும். சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகமும், விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையமான சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகமும் தொடர்ந்து இணைந்து செயல்படும். மின்சார வான்வழி டாக்சியில் ஒரு விமானியுடன் ஆறு பயணிகளை ஏற்றிச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இதில், செங்குத்தாக மேலே தூக்குவதற்கு ஆறு மின்சார மோட்டார்களும், முன்னோக்கிச் செலுத்துவதற்காகப் பின்புறத்தில் மற்றொன்றும் என ஏழு மின்சார மோட்டார்கள் பயன்படுத்தப்படும். வான்வழி ஆம்புலன்ஸ்கள் மற்றும் சரக்குப் போக்குவரத்து ஆகியவற்றிலும் இவை பயன்படும். இவ்வாறு ராம் மோகன் நாயுடு பேசினார்.













