Home செய்திகள் தேசிய செய்திகள் உருக்குலைத்த அசாம் வெள்ளம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 99 ஆக உயர்வு

உருக்குலைத்த அசாம் வெள்ளம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 99 ஆக உயர்வு

திஸ்பூர், ஆக. 9- அசாம் மாநிலத்தில், கனமழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 99 ஆக அதிகரித்துள்ளது. மேலும், அசாமில் 12 மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 1.68 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதில் கோல்பாரா, காக்சார், லக்கிம்பூர், திப்ரூகர், ஜோர்ஹட், பிஸ்வநாத், சராய்தியோ, நல்பாரி, பக்சா, சிவசாகர், தர்ரங், சோனித்பூர், தின்சுகியா, உதல்குரி, கோலாகாட், கர்பி அங்லோங் உள்ளிட்ட 25 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. சுமார் 500-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளத்தால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மோசமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. சுமார் 2 வாரங்களாக ரயில் போக்குவரத்து தடைபட்டுள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். வெள்ளம் பாதித்த பகுதியில் உள்ள மக்கள் மீட்கப்பட்டு மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 133 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கனமழை குறைந்ததை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் வெள்ளம் வடிந்து வருகிறது. இதனால் பாதிப்புகளும் குறைந்து வருகின்றன. எனினும், வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி இதுவரை கனமழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 99 ஆக அதிகரித்துள்ளது. மழை வெள்ளத்தால் மாநிலம் முழுவதும் சுமார் 1.68 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு சார்பில் தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 55 நிவாரண முகாம்களில், 10,000-க்கும் மேற்பட்ட மக்கள் தங்கியுள்ளனர். மேலும், 18 நிவாரணப் பொருட்கள் விநியோக மையங்களும் செயல்பட்டு வருகின்றன. வெள்ளத்தால் 10,748.64 ஹெக்டேர் பயிர்கள் மூழ்கியுள்ளன என்றும், 47,000-க்கும் மேற்பட்ட கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 30 ஆம் தேதி வரை வெள்ளச் சேதங்கள் குறித்து வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்யும் பணியை அரசு மேற்கொள்ளும் என்று முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.