
புதுடெல்லி: ஆக. 12-
வெளிநாட்டு நன்கொடைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கும் எப்சிஆர்ஏ மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு (ஜேபிசி) அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
வெளிநாடுகளில் இருந்து இந்திய தொண்டு நிறுவனங்களுக்கு அனுப்பப்படும் நன்கொடைகளை வரன்முறைப்படுத்த வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா (எப்சிஆர்ஏ) கடந்த மார்ச் மாதம் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை நடப்பு மழைக்கால கூட்டத் தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு முனைப்பு காட்டியது.ஆனால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், எப்சிஆர்ஏ மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆளும் பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த சில கட்சிகளும் மசோதா குறித்து கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளன.இதுதொடர்பாக பாஜக மூத்த எம்பி ஒருவர் கூறும்போது, “எப்சிஆர்ஏ மசோதாவை காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் கட்சிகள் கடுமையாக எதிர்க்கின்றன. அந்த கட்சிகள் மசோதாவை கைவிட கோருகின்றன. வேறு சில கட்சிகள் மசோதாவை, நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிசீலனைக்கு அனுப்ப கோரி வருகின்றன.
நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு பல்வேறு எதிர்க்கட்சிகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இதில் மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்ப ஒருமித்த கருத்து எட்டப்பட்டு உள்ளது. எனவே நடப்பு கூட்டத் தொடரில் எப்சிஆர்ஏ மசோதா எடுத்துக் கொள்ளப்படாது. இந்த மசோதா ஜேபிசி-க்கு அனுப்பப்படும்” என்றார்.பல்வேறு கிறிஸ்தவ, முஸ்லிம் தொண்டு அமைப்புகள் எப்சிஆர்ஏ மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அந்த அமைப்புகளின் நிர்வாகிகள் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசி உள்ளனர்.













