
முர்ஷிதாபாத்: ஆக. 12-
மேற்குவங்கத்தில் 16 வயது சிறுவன் ஒருவன் தனக்கு உடலில் எரிச்சல் ஏற்படுவதாகக் கூறி, கடந்த ஒரு மாதமாக பகல், இரவு என பெரும்பாலான நேரத்தை குளங்களிலேயே கழித்து வரு்கிறான். மேற்கு வங்க மாநிலம், முர்ஷிதாபாத் மாவட்டம், பெல்டாங்கா பகுதியில் வசித்து வரும் 16 வயது சிறுவன் இக்பால், கடந்த ஒரு மாதமாக பகல், இரவு என பெரும்பாலான நேரத்தை குளங்களிலேயே கழித்து வருகிறார்.தண்ணீரில் இருந்து வெளியே வந்தவுடன் தனது உடல் முழுவதும் எரிச்சல் ஏற்படுவதாகவும், ஏதோ ஒரு அமானுஷ்ய சக்தி தன்னை ஆட்கொண்டதைப் போல உணர்வதாகவும் கூறுகிறார். இதனால் குளத்திலிருந்து வெளியேவர மறுத்து தொடர்ந்து தண்ணீரிலேயே தங்கியிருப்பதாக கூறப்படுகிறது.உடல் பருமனாக இருக்கும் இக்பால், காலை முதல் இரவு வெகுநேரம் வரை குளங்களில் மிதந்தபடி காணப்படுகிறார். சில நேரங்களில் ஒரு குளத்திலிருந்து மற்றொரு நீர்நிலைக்கும் அவர் செல்வதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.சிறுவனின் உடல்நிலை குறித்து கவலை அடைந்துள்ள அவரது பெற்றோர், ஏற்கெனவே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும், ஆனால் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றும் தெரிவித்தனர்.மேலும், நீண்டகால சிகிச்சைக்கான செலவை தங்களால் சமாளிக்க முடியவில்லை என்றும், சிறுவனுக்கு உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்க உதவுமாறும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.













