
பெங்களூரு, ஆக. 12- முதலமைச்சர் டி.கே. சிவகுமார் தனது அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்கு இலாகாக்களை ஒதுக்கீடு செய்துள்ளார்.அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடு தொடர்பாக இரண்டு நாட்களுக்கு முன்பு டெல்லிக்கு சென்ற முதலமைச்சர் டி.கே. சிவகுமார், மேலிட தலைவர்களுடன் இலாகா ஒதுக்கீடு குறித்து ஆலோசனை நடத்தினார்.முதலமைச்சர் டி.கே. சிவகுமாருடன் இலாகா ஒதுக்கீடு குறித்து ஆலோசனை நடத்திய மேலிட தலைவர்கள், இலாகா ஒதுக்கீடு பட்டியலை அனுப்பி வைப்பதாக கூறியிருந்தனர். அதன்படி திங்கட்கிழமை மேலிட தலைவர்களுடன் பேசிவிட்டு பெங்களூருக்கு திரும்பிய முதலமைச்சர், மேலிடத்திடமிருந்து இலாகா ஒதுக்கீடு பட்டியலுக்காக காத்திருந்த நிலையில், இன்று காலை முதலமைச்சர் அலுவலகத்திற்கு இலாகா ஒதுக்கீடு பட்டியல் வந்து சேர்ந்தது.இதில், ஏற்கனவே முதற்கட்ட அமைச்சரவையில் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட மூத்த அமைச்சர் முனியப்பாவிற்கு புதிதாக சமூக நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.அதேபோல், சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த யு.டி. காதரின் இலாகா மாற்றப்பட்டு, அவருக்கு வக்பு மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட அமைச்சரவையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட 19 பேரில் 13 பேருக்கு மட்டுமே தற்போது இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இன்னும் ஆறு பேருக்கு இலாகா ஒதுக்கீடு செய்யப்படவில்லை.தற்போது இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அமைச்சர்களின் பட்டியல் வருமாறு:
* சலுவராயசுவாமி – வேளாண்மை
* ரிஸ்வான் அர்ஷத் – உணவுப் பொருள் வழங்கல்
* கே.எச். முனியப்பா – சமூக நலத்துறை
* சந்தோஷ் லாட் – தொழிலாளர் நலன்
* பசந்தப்பா – மீன்வளத்துறை
* மது பங்காரப்பா – ஆரம்ப மற்றும் உயர்நிலைக் கல்வி
* பசவராஜ ராயரெட்டி – உயர்கல்வி
* ஜமீர் அகமது கான் – வீட்டுவசதி துறை
* லட்சுமண சவதீ – கூட்டுறவுத்துறை
* அஜய் சிங் – வனத்துறை
* எஸ்.எஸ். மல்லிகார்ஜுனா – சுரங்கம் மற்றும் புவியியல் துறை
* பாலகிருஷ்ணா – சிறுபாசனத்துறை
* புட்டரங்கசெட்டி – கால்நடை பராமரிப்புத் துறை
இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில் அமைச்சர்களாகப் பொறுப்பேற்ற ருத்ரப்பா லமாணி, நரேந்திரசுவாமி, விஜயானந்த காசம்பூர், பி. நாகேந்திரா, சிவராஜ் தங்கடகி, ரகுமூர்த்தி, சிவலிங்கேகவுடா ஆகியோருக்கு இன்னும் இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.













